புதுடெல்லி: நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன். அனைத்து மதங்களையும் மதிக்கிறேன் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தில் கஜுராஹோ கோயில்கள் அமைந்துள்ளன.
கடந்த 10, 11-ம் நூற்றாண்டில் சந்தேல மன்னர்களால் இந்த கோயில்கள் கட்டப்பட்டன. கடந்த 12-ம் நூற்றாண்டின்போது சுமார் 20 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 85-க்கும் மேற்பட்ட கோயில்கள் இருந்ததாக வரலாற்று பதிவுகள் குறிப்பிடுகின்றன. முகலாயர் ஆட்சிக் காலத்தில் கஹுராஹோ கோயில்கள் சேதப்படுத்தப்பட்டன.
இதன்காரணமாக தற்போது 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 25 கோயில்கள் மட்டுமே எஞ்சி உள்ளன. இந்த சூழலில் கஜுராஹோ கோயில் வளாகத்தின் ஒரு பகுதியான ஜவாரி கோயிலில் சேதமடைந்த நிலையில் உள்ள 7 அடி உயர விஷ்ணு சிலையை சீரமைக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் ராகேஷ் தலால் என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ் மாசி அமர்வு கடந்த 16-ம் தேதி விசாரித்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சஞ்சய் எம் நூலி கூறும்போது, “கஜுராஹோவின் ஜவாரி கோயிலில் 7 அடி உயர விஷ்ணு சிலை உடைந்த நிலையில் இருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகும் விஷ்ணு சிலையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது ஜவாரி கோயில் இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே விஷ்ணு சிலையை சீரமைக்க ஏஎஸ்ஐ-க்கு உத்தரவிட வேண்டும்” என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கூறும்போது, “சுயவிளம்பர நோக்கத்தில் வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது. நீங்கள் (மனுதாரர் ராகேஷ் தலால்) விஷ்ணுவின் தீவிர பக்தர் என்று கூறுகிறீர்கள். நீங்கள் நேரடியாக சென்று விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்யுங்கள். அந்த இடம் ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டில் உள்ளது.
மனுவை தள்ளுபடி செய்கிறோம்” என்று உத்தரவிட்டார். தலைமை நீதிபதி கவாயின் கருத்து தொடர்பாக சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அவரது கருத்து மத உணர்வுகளை புண்படுத்துகிறது என்று பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து உள்ளனர்.
விஷ்ணு மற்றும் சனாதன தர்மத்துக்கு எதிரான கருத்தை வாபஸ் பெற வேண்டும் என்று ஏராளமான வழக்கறிஞர்கள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதி உள்ளனர். பல்வேறு மதத் தலைவர்களும் கடும் ஆட்சேபம் தெரிவித்து வருகின்றனர். இதன்காரணமாக கஜுராஹோ கோயில் விவகாரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் நேற்று ஒரு வழக்கு விசாரணையின்போது விளக்கம் அளித்தார். அவர் கூறும்போது, “கடந்த 16-ம் தேதி ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட கோயில் ஏஎஸ்ஐ கட்டுப்பாட்டில் இருக்கிறது. இதை முன்னிறுத்தியே உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. நான் அனைத்து மதங்களையும் நம்புகிறேன். அனைத்து மதங்களையும் மதிக்கிறேன்” என்று தெரிவித்தார்.
அப்போது மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறும்போது, “ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு. இது நியூட்டனின் 3-வது இயக்க விதி ஆகும். இப்போது ஒவ்வொரு வினைக்கும் சமூக வலைதளத்தில் எதிர்மறையான வினை கிளம்பி விடுகிறது. தலைமை நீதிபதியை எனக்கு 10 ஆண்டுகளாக தெரியும். அவர் அனைத்து வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்வார். அனைத்து மதங்களையும் மதிக்கக்கூடியவர்” என்று தெரிவித்தார்.