மும்பை: அனில் அம்பானியின் குழும நிறுவனங்கள் வங்கிகளில் கடன் மோசடியில் ஈடுபட்டது தொடர்பாக அமலாக்கத் துறை (இடி) நேற்று ஒரே நேரத்தில் பல இடங்களில் சோதனையில் ஈடுபட்டது. அனில் அம்பானி குழும நிறுவனங்கள் வங்கியில் ரூ.1000 கோடி அளவிற்கு கடன் மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அனில் அம்பானி குழுமத்தின் 50 நிறுவனங்களுக்குச் சொந்தமான 35-க்கும் மேற்பட்ட இடங்கள் மற்றும் 25 நபர்களிடம் அமலாக்கத் துறை நேற்று சோதனை நடத்தியது. டெல்லியை தளமாகக் கொண்ட இடி புலனாய்வு பிரிவு இந்த விசாரணையை மேற்கொண்டது.
2017 மற்றும் 2019-க்கு இடையில் அம்பானியின் குழும நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி வழங்கிய சுமார் ரூ.3,000 கோடி கடன் சட்டவிரோதமாக திருப்பி விடப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கில் விசாரணை நடத்தி வருவதாக இடி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனிடையே அமலாக்கத் துறை நடத்தி வரும் சோதனைகள் குழும நிறுவனங்களின் வர்த்தக நடவடிக்கைகளில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று அனில் அம்பானி குழுமத்தைச் சேர்ந்த ரிலையன்ஸ் பவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளின் கீழ், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் அதன் உரிமையாளர் அனில் அம்பானி ஆகியோரை ‘மோசடி’ என்று எஸ்பிஐ முறைப்படி அறிவித்ததையடுத்து இடி சோதனையை தொடங்கியுள்ளது.