புதுடெல்லி: வங்கிக் கடன் மோசடி தொடர்பாக தொழிலதிபர் அனில் அம்பானி (66) வரும் 5-ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராக கோரி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறுகையில், “லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், யெஸ் வங்கியில் வாங்கிய ரூ.3,000 கோடி கடனை தொழிலதிபர் அனில் அம்பானி சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமையகத்தில் ஆகஸ்ட் 5-ம் தேதியன்று அனில் அம்பானி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது வாக்குமூலம் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (பிஎம்எல்ஏ) கீழ் பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்தன.
இந்த விவகாரத்தில் கடந்த 2024 நவம்பர் 11-ல், டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் தற்போது அமலாக்கத் துறையும் வழக்கு தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணையில் இறங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அனில் அம்பானி குழுமத்தின் பல நிறுவனங்கள் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.