தேசிய அளவில் தற்போதைய முக்கியமான அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது ‘SIR’. அது என்ன ‘SIR’? அப்படி ஒரு சந்தேகம் எழுகிறதா? அதற்கான விடையையும், அதைச் சுற்றி ஏன் இத்தனை சர்ச்சைகளும், உச்ச நீதிமன்ற வழக்குகளும் என்று அலசுவோம்.
பிஹார் மாநிலம் இந்த ஆண்டு இறுதியில் (அக்டோபர் / நவம்பரில்) சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது. இதனை முன்னிட்டு பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர் – ‘SIR’ – special intensive revision of electoral rolls ) மேற்கொண்டுள்ளது தேர்தல் ஆணையம். தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது. இதற்கு பிஹாரில் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியது. மகாகத்பந்தன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதுதான் அது என்ன ‘SIR’? என்ற எதிர்பார்ப்பு எகிறக் காரணம்.
நீங்கள் இந்தியர்தானா?! – வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தத்தில் தேறி ஒரு வாக்காளர் தனது வாக்குரிமையை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமானால், அதுவும் குறிப்பாக பிஹாரில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக பதிவு செய்து கொண்டவர்கள் தாங்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ், பாஸ்போர்ட் போன்ற கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயம். மொத்தத்தில் இந்த நடைமுறைக்கு தன்னை உட்படுத்தும் ஒருவர் தான் ஓர் இந்தியர்தான் என்பதை உரிய ஆவணங்களுடன் நிரூபிக்க வேண்டும்.
ஆதரவும் எதிர்ப்பும்: இந்தப் பணியானது, “வங்கதேசம், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்காளர்களாகக் கொண்டு நடக்கும் வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க உதவும்” என்று பாஜக கூறுகிறது. இதை பிஹார் மட்டுமல்ல, நாடு முழுவதுமே நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்கிறது.
ஆனால், இந்த SIR-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், “சட்டப்பேரவைத் தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருக்கும் சூழலில். இவ்வாறாக சிறப்புத் தீவிர திருத்தம் செய்வது தவறுதலாக தகுதியான வாக்காளர்களை நீக்குவதையே நிகழ்த்தும். இது பாஜகவுக்கு சாதகமான செயல்பாடு” என்று கூறுகின்றன. மேலோட்டமாக ஆதரவுக்கும், எதிர்ப்புக்கும் இது மட்டுமே காரணமாக இருந்தாலும் கூட, ஆழ்ந்து அலசினால் இது நிச்சயமாக வருகின்ற நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிரொலிக்கக் கூடிய விவகாரமாக இருக்கும் என்று புரியக் கூடும்.
தேர்தல் ஆணையம் அடித்த ‘எச்சரிக்கை மணி’ – பிஹாரில் உள்ள தகுதிவாய்ந்த 8 கோடி வாக்காளர்கள் ஜூலை 26-ம் தேதிக்குள் தங்களை வாக்காளராக மீண்டும் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு செய்யத் தவறியவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை இழப்பார்கள். மேலும், அவர்கள் வெளிநாட்டவராகக் கருதப்படுவார்கள். தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி அவர்கள் சிறையில் அடைக்கப்படலாம் அல்லது நாடு கடத்தப்படலாம்.
ஆணையத்தின் இந்த எச்சரிக்கையை சுட்டிக்காட்டி, “வாக்குரிமையை உறுதி செய்கிறோம் என்ற பெயரில் சட்டவிரோத குடியேறிகளாக சிலரை முத்திரை குத்தி அவர்களை அப்புறப்படுத்துவதையும் தேர்தல் ஆணையம் துடிக்கிறது. இதன்மூலம், அரசமைப்பு இயந்திரமாக அல்லாது பாஜகவின் அலுவலகம் போல் தேர்தல் ஆணையம் இயங்குகின்றது” என்று எதிர்க்கட்சிகளின் குற்றஞ்சாட்டுகின்றன.
நியாயப்படுத்தும் தேர்தல் ஆணையம்: கண்டனக் குரல்களும், எதிர்ப்புகளும், வழக்குகளின் என்ணிகைகளும் ஒருபக்கம் அதிகரித்துக் கொண்டே செல்ல, வாக்காளர் பட்டியலில் ஒரே ஒரு தகுதியற்ற வாக்காளர் பெயர் கூட இருக்கக் கூடாது. நகரமயாக்கல், புலம்பெயர்தல், தகுதியற்றவர்கள் புதிய வாக்காளர்கள் சேர்ப்பு, இறந்த வாக்காளர்களின் பெயர் நீக்கம் செய்யப்படாதது, வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் வாக்குரிமை வைத்திருப்பது போன்ற பல காரணங்களால் தான் இந்த தீவிர திருத்தம் செய்யப்படுகிறது என்று தனது நடவடிக்கையை நியாயப்படுத்துகிறது தேர்தல் ஆணையம்.
இது ஒன்றும் புதிய நடவடிக்கை இல்லை. கடந்த 2003-ம் ஆண்டு கடைசியாக வாக்காளர் திருத்தம் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டது. அதன்பின்னர் ஒவ்வொரு ஆண்டும் வாக்காளர் திருத்தப் பட்டியல் வெளியாகிறது. கடைசியாக மக்களவைத் தேர்தலுக்கு முன்னர் கூட வெளியானது.
அதன்படி 2003 வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருந்தவர்கள், வாக்காளர் பதிவுப் படிவங்களை உரிய ஆவணங்களுடன் திரும்பவும் சமர்ப்பிக்க வேண்டும். 2003-க்குப் பின்னர் வாக்காளர் பட்டியலில் இணைந்தோர், தங்களின் பிறந்த தேதி, வசிப்பிடத்துக்கான ஆதாரங்களைக் கொடுக்க வேண்டும். கூடவே பெற்றோர்களில் இருவர் அல்லது ஏதேனும் ஒருவரின் அடையாள அட்டைகளையும் சமர்ப்பிக்க வேண்டும்.
தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள ஆவணங்களை இணைத்து படிவங்களை ஜூலை 26-க்குள் சமர்ப்பித்தால், ஆகஸ்ட் 1-ம் தேதி புதிய திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘இது களவாடுதல்’ – பிஹாரில் தோராயமாக 7 கோடியே 96 லட்சம் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் சராசரியாக 2.9 கோடி வாக்காளர்கள் தாங்கள் இந்தியக் குடிமக்கள் என்பதை நிரூபிக்க வேண்டியுள்ளது. ஆனால், சில கணக்கெடுப்புகள் 4.7 கோடி வாக்காளர்கள் வரை இதனை நிரூபிக்க வேண்டியது இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக மோசடிகள் நடைபெற்றன. அதையே பிஹாரிலும் நடத்த சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் அதை நடக்கவிடமாட்டோம். பிஹாரில் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்’ , மகாராஷ்டிரா தேர்தல் மோசடியின் நீட்சியே. இதன் மூலம் மக்களின் வாக்குரிமை மட்டுமல்லாது அவர்களின் எதிர்காலமும் பறிக்கப்படும்.
ஒரு தேர்தலையே களவாடி விழுங்கிவிடவே இந்த தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்படுகிறது. அவ்வாறாக மக்களின் வாக்குரிமையை, இளைஞர்களின் வாக்குரிமையை தேர்தல் ஆணைய விழுங்கிவிட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.” என்று கடுமையாக கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சந்தேகக் கேள்விகள்: பல்வேறு காரணங்களை முன்வைத்து, வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம் நியாயப்படுத்தினாலும் கூட அதற்கு சமமான அளவில் கேள்விகளோடு சந்தேகக் கேள்விகளும், சில கிளைக் கேள்விகளும் கிளம்புகின்றன.
அவற்றில் ஒன்றுதான், “2003-ம் ஆண்டுக்குப் பின் வாக்காளர் பட்டியலில் இணைந்த அனைவரின் நம்பகத்தன்மையையும் தேர்தல் ஆணையம் கேள்விக்கு உள்ளாக்கும் என்றால், 2003-க்குப் பின்னர் வெற்றி பெற்ற அனைத்து வேட்பாளர்களின் வெற்றியும் செல்லாததாகுமா?” என்பது.
இன்னும் சில சந்தேகங்களும் இருக்கின்றன. இவ்வளவு பெரிய முடிவை தேர்தல் ஆணையம் யாருடனும் கலந்தாலோசிக்காமல் ரகசியமாக செயல்பாட்டுக் கொண்டுவந்த விதம் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறதா என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
அதைவிடவும் அபத்தமானதாக உள்ளது, தேர்தல் ஆணையம் கோரும் 11 ஆவணங்கள் என்று விமர்சனம் எழுந்துள்ளது. 2003-க்குப் பின் வாக்காளர் பட்டியலில் இணைந்த வாக்காளர்கள் தாங்கள் இந்தியக் குடிமகன் என்பதை நிரூபிக்க ஆதார், ரேஷன் அட்டை, பான் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஏன் தேர்தல் ஆணையமே வழங்கிய வாக்காளர் அட்டையை அளித்தால் அவை ஏற்கப்படாது.
அந்த 11 ஆவணங்கள்: தேர்தல் ஆணையம் 11 சான்றிதழ்களை பட்டியலிட்டுள்ளது. அவை: 1.பிறப்புச் சான்றிதழ், 2.பாஸ்போர்ட், 3.வன உரிமைச் சான்றிதழ், 4.கல்விச் சான்றிதழ் (மெட்ரிகுலேஷன் அல்லது உயர்க் கல்விச் சான்றிதழ்), 5. நிரந்தரக் குடியுரிமை சான்றிதழ் (கலெக்டர் அல்லது அவருக்கு இணையான பதவி கொண்ட அதிகாரி வழங்கியதாக இருக்க வேண்டும்.) 6. எஸ்.சி, எஸ்,டி, ஓபிசி சாதிச் சான்றிதழ். 7.நிலம் அல்லது மனை ஒதுக்கீட்டு ஆவணம். 8.என்ஆர்சி ஆவணம் .9. மத்திய, மாநில அரசுகள் அல்லது பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை அல்லது பென்ஷன் அட்டை 10. குடும்ப பதிவேடு. 11.கடந்த இ987-க்கு முன்பு அரசு அல்லது பொதுத் துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டை.
உச்ச நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன? – இந்தச் சூழலில் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு திருத்தப் பணியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ராஷ்டிரிய ஜனதா தள எம்பி மனோஜ் ஜா, திரிணமூல் காங்கிரஸ் எம்பி மரூவா மொய்த்ரா, இந்திய கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் டி.ராஜா உட்பட 11 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்த நீதிபதிகள், வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டனர்.
இன்றைய விசாரனையின்போது ஆதார், வாக்காளர், ரேஷன் அட்டைகளை அடையாள ஆவணங்களாக ஏற்பது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து தேர்தல் ஆணையம் தரப்பில் ஒரு வாரத்துக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. இது சற்றே சிறிய ஆறுதலாக விடிந்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் வாதம்: உச்ச நீதிமன்றத்தில் இன்று வாதிட்ட தேர்தல் ஆணைய வழக்கறிஞர்கள், “பிஹாரில் 7.89 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில் 4.96 லட்சம் பேர் 2003-ம் ஆண்டுக்கு முன்பு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டவர்கள் ஆவர். மீதமுள்ள 2.93 கோடி பேர் மட்டுமே 2003-ம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களின் ஆவணங்கள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றன. பிஹாரில் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த சுமார் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட முகவர்கள் உள்ளனர். அவர்களின் கண்காணிப்பை மீறி யாருடைய பெயரையும் பட்டியலில் இருந்து நீக்க முடியாது.
கடந்த 2003-ம் ஆண்டில் இதுபோன்ற சிறப்பு திருத்தப் பணியை 31 நாட்களில் மேற்கொண்டோம். தற்போதும் ஒரு மாதத்தில் சிறப்பு திருத்தப் பணியை மேற்கொள்வோம். முறையான விசாரணை இன்றி யாருடைய பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது. வெளிப்படைத்தன்மையுடன் சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்படுகிறது” என்றனர்.
இந்த வழக்கின் விசாரணையின்போது மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தனது வாதத்தில், “ஆதார் என்பது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஓர் அடையாள ஆவணம். இதைப் பெறுவதற்கு அரசு தொடர்ந்து பொதுமக்களுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால், முதல்முறையாக இந்த ஆவணம் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. குடிமக்களைக் கண்டறிவதற்கான மறைமுகப் பயிற்சியாக இந்த நடவடிக்கை உள்ளது” என குற்றம் சாட்டினார். அப்போது, தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராகேஷ் திவேதியோ, “ஆதார் என்பது அடையாள அங்கீகார ஆவணம். குடியுரிமை ஆவணம் அல்ல” என்று குறிப்பிட்டதும் கவனம் ஈர்க்கும் விவாதப் பொருளாகியுள்ளது.