புதுடெல்லி: இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை, பாகிஸ்தான் தாக்குதலுக்கான பதிலடி, போர் நிறுத்தம் குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “அணு ஆயுத தாக்குதல் என்ற மிரட்டலை எல்லாம் இந்தியா பொறுத்துக் கொள்ளாது” என்று பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்
பிரதமர் மோடி திங்கள்கிழமை இரவு நிகழ்த்திய உரையில், “கடந்த சில தினங்களுக்கு முன் நம் நாட்டின் ராணுவத் திறனையும், அதன் கட்டுப்பாட்டையும் பார்த்தோம். நான் முதலில் இந்தியாவின் வீரம் மிகுந்த படைகளுக்கும், ஆயுதம் தாங்கிய படை வீரர்களுக்கும். நமது உளவுத் துறையினருக்கும், நமது விஞ்ஞானிகளுக்கும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் தரப்பிலிருந்தும் சல்யூட் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய வீரம் மிகுந்த ராணுவ வீரர்கள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் இலக்குகளை அடைவதற்காக எல்லையில்லாத வீரத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். நான் அவர்களது வீரத்தையும், துணிச்சலையும், பராக்கிரமத்தையும் வணங்குகிறேன். நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் இதைச் சமர்ப்பிக்கிறேன்.
ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் காட்டிய அந்த காட்டுமிராண்டித்தனம் நம் நாட்டையும், உலகையும் அதிர்ச்சியடையச் செய்தது. விடுமுறை காலத்தை கழிக்க வந்த அப்பாவி குடிமக்களை அவர்களது மதம் என்ன என்று கேட்டு, அவர்களது குடும்பத்திற்கு முன்னே, அவர்களது குழந்தைகளுக்கு முன்னே இரக்கமில்லாமல் கொன்றனர். இது பயங்கரவாதத்தின் மிகவும் வெறுக்கத்தக்க முகமாகும். இது கொடூரம் மிகுந்தது. இந்தியாவின் ஒற்றுமையை உடைப்பதற்கு முயற்சி மேற்கொள்ளப்பட்டது, எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த வலியை தந்தது.
இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முழு நாடும் ஒவ்வொரு குடிமகனும், ஒவ்வொரு சமூகமும், ஒவ்வொரு வர்க்கமும், ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒரே குரலில் பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தின. நாங்கள் பயங்கரவாதிகளை மண்ணோடு மண்ணாக்க, இந்தியப் படைகளுக்கு முழு அனுமதி கொடுத்தோம்.
இன்று ஒவ்வொரு பயங்கரவாதியும், பயங்கரவாதத்தினால் ஏற்படும் தொல்லையை புரிந்துகொண்டிருக்கிறார்கள். அதாவது, நமது சகோதரிகள், மகள்கள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழிப்பதற்கான அந்தச் செயலின் பிரதிபலன் என்னவாக இருக்கும் என்று அவர்கள் புரிந்துகொண்டிருப்பார்கள். ஆபரேஷன் சிந்தூர் ஒரு பெயர் மட்டுமல்ல, இந்த நாட்டின் கோடான கோடி மக்களின் எண்ணங்களின் ஒரு பிரதிபலிப்பு. ஆபரேஷன் சிந்தூர் நியாயத்தை நிலை நாட்டுவதற்கான ஓர் உறுதிமொழி.
மே 6-ம் தேதி இரவு, மே 7-ம் தேதி காலை இந்த முழு உலகமும் அந்த உறுதியின் முடிவு என்ன என்பதை கண்டார்கள். இந்தியாவின் ராணுவம், பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களின் மீதும், அவர்களுடைய பயிற்சி மையங்கள் மீதும் துல்லியமாக தாக்குதல் நடத்தினார்கள். பயங்கரவாதிகள் தங்களுடைய கனவில்கூட, இந்தியா இத்தகைய முடிவு எடுக்கும் என்று யோசித்திருக்க மாட்டார்கள். ஆனால், நாடு ஒன்றிணைந்து செயல்பட்டபோது, நாடுதான் முதலில் என்ற எண்ணம் நிரம்பி வழிந்து, நாட்டின் நலனே முதலில் என்ற எண்ணம் ஏற்பட்டது.
அடிப்படையான முடிவு எடுக்கும்போது, அது சரியான முடிவுகளை கொண்டுவந்து தருகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்களின் மீது இந்தியா ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியபோது, இந்தியா ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்தியபோது, பயங்கரவாதக் குழுக்களின் கட்டிடங்கள் மட்டுமல்ல, அவற்றின் நம்பிக்கையும் தவிடுபொடியானது.
பகவல்பூர் மற்றும் முரிதுகே போன்ற பயங்கரவாதிகளின் வாழ்விடங்கள், உலக பயங்கரவாதிகளின் பல்கலைக்கழகமாக விளங்கியது. உலகில் மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் எங்கேயாவது நடந்தால், அது செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவில் நடந்த தாக்குதலாக இருக்கட்டும், லண்டன் ரயில் தாக்குதலாக இருக்கட்டும் அல்லது பாரதத்தில் பல ஆண்டுகளாக நடந்த பெரிய பெரிய பயங்கரவாத தாக்குதலாக இருக்கட்டும் இவற்றின் தொடர்பு எப்படியாவது இந்த பயங்கரவாத முகாம்களோடு இணைந்திருந்தது.
பயங்கரவாதிகள் நமது சசோதரிகளின் நெற்றி குங்குமத்தை அழித்தனர். இதனால், பயங்கரவாதத்தின் தலைமை பீடத்தை இப்போது இந்தியா அழித்திருக்கிறது. இந்தியாவின் இந்தத் தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமான பயங்கரவாதிகள் இறந்திருக்கிறார்கள். பயங்கரவாதத்தின் பல கிளைகள் கடந்த 25-30 ஆண்டுகளாக வெளிப்படையாக பாகிஸ்தானில் உலாவி வருகிறார்கள். இவர்கள் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தி வந்தார்கள். அவர்களை இந்தியா ஒரே அடியில் அழித்து விட்டது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தான் மிகப் பெரிய நிராசையில் வீழ்ந்து விட்டது. தோல்வி மனப்பான்மையில் வீழ்ந்து விட்டது. நிலைகுலைந்து போய் விட்டது. இந்த நிலைகுலைவின் காரணமாக பாகிஸ்தான் மற்றுமொரு அசட்டுத்தனமான நடவடிக்கை எடுத்தது. பயங்கரவாதத்தின் மீது இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு துணைபோவதை விட்டுவிட்டு, இந்தியாவின் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.
நமது பள்ளிகள், கல்லூரிகள், குருத்வாராக்கள், கோயில்கள், சாமான்ய குடிமக்களின் வீடுகளை குறியாகக் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. நம்முடைய ராணுவ முகாம்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. ஆனால், இதில்கூட பாகிஸ்தானின் முகத்திரை கிழிக்கப்பட்டது. பாகிஸ்தானின் ட்ரோன்கள், ஏவுகணைகள் ஆகியவை இந்தியாவின் முன்னே செயலிழந்து போனதை உலகம் கண்டது. இந்தியாவின் பலம் வாய்ந்த பாதுகாப்பு கட்டுமானங்கள், அவற்றை வானிலேயே தடுத்து அழித்தன.
பாகிஸ்தான் எல்லைப் பகுதியில், தாக்குதல் நடத்த தயாராக இருந்தது. ஆனால், பாகிஸ்தானின் மையப்பகுதியில் இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்தியாவின் ட்ரோன்கள், ஏவுகணைகள் சரியாக தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானின் விமானப் படையின் விமானங்களுக்கு சேதம் ஏற்படுத்தினோம். இந்த விமானங்கள் மீது பாகிஸ்தானுக்கு மிகுந்த கர்வம் இருந்தது. இந்தியா முதல் மூன்று நாட்களில் பாகிஸ்தானில் ஏற்படுத்திய அழிவுகள் எப்படிப்பட்டவை என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.
எனவே, இந்தியாவின் தாக்குதல் செயல்பாடுகளுக்கு பிறகு, பாகிஸ்தான் தப்பிப்பதற்கான வழிமுறைகளை தேடத் தொடங்கியது. பாகிஸ்தான் உலகம் முழுவதிலும் இந்த தாக்குதலை குறைப்பதற்கான வழிமுறைகளை செய்யுங்கள் என வேண்டியது. மேலும், முற்றிலுமாக அடிவாங்கிய பின்னர், மே 10-ம் தேதி மதியத்துக்கு மேல் ஒரு கட்டாயத்தின் காரணமாக, பாகிஸ்தான் ராணுவத் தளபதி, நம்முடைய ராணுவத் தளபதியோடு தொடர்பு கொண்டார்.
அதுவரை நாம் பயங்கரவாத கட்டமைப்புகளை மிகப் பெரிய அளவில் அழித்து விட்டோம். பயங்கரவாதிகளை சாவின் எல்லைக்கு கொண்டு சென்றோம். பாகிஸ்தான் தன் நெஞ்சத்தில் மறைத்து வைத்திருந்த பயங்கரவாத முகாம்களை நாம் அழித்து விட்டோம். இதனால், பாகிஸ்தானிலிருந்து பெரிய அழுகுரல் கேட்கத் தொடங்கியது.
பாகிஸ்தான் தரப்பிலிருந்து இது சொல்லப்பட்டபோது, அதாவது, அவர்களது தரப்பிலிருந்து பயங்கரவாத தாக்குதலோ அல்லது ராணுவத்தின் மூலம் அசட்டுத்தனமான தாக்குதல்களோ இனிமேல் இருக்காது என்று சொன்னபோது, உடனே, இந்தியா அதை பற்றி யோசனை செய்தது.
நான் மீண்டும் சொல்கிறேன். பாகிஸ்தானின் பயங்கரவாத ராணுவ முகாம்கள் மீது எங்களுடைய பதிலடி நடவடிக்கைகள் இப்போது சிறிது காலத்துக்கு நிறுத்தப்பட்டிருக்கிறது. வருகிற நாட்களில் பாகிஸ்தானின் ஒவ்வொரு நடவடிக்கையும் நாங்கள் தீவிரமாக கண்காணிப்போம். அது எந்த மாதிரியான வழிமுறைகளை பின்பற்றுகிறது என்பதை பார்ப்போம்.
இந்தியாவின் மூன்று படைகளும், நம்முடைய விமானப் படை, நம்முடைய தரைப் படை, கடற்படை, நம்முடைய எல்லைப் பாதுகாப்புப் படை, இந்தியாவின் துணை ராணுவப் படை அனைத்தும் எப்போதும் தயார் நிலையில் இருக்கின்றன. சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் வான்வழி தாக்குதலுக்கு பிறகு இப்போது ஆபரேஷன் சிந்தூர் என்பது இந்தியாவின் வழிமுறையாகி விட்டது.
ஆபரேஷன் சிந்தூர் என்பது பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு புதிய கோட்டை கிழித்துள்ளது. ஒரு புதிய அளவுகோல், ஒரு புதிய கொள்கையை உருவாக்கி இருக்கிறது.
முதலில், இந்தியாவின் மீது பயங்கரவாத தாக்குதல் நடந்தால், அதற்கு சரியான பதிலடி கொடுக்கப்படும். நாங்கள் எங்களுடைய வழிமுறையில், எங்களுடைய விதிமுறைகளுக்கேற்ப, பதிலடி தருவோம். பயங்கரவாதத்தின் வேர்கள் எங்கெல்லாம் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சென்று கடுமையான நடவடிக்கை எடுப்போம்.
இரண்டாவதாக, அணு ஆயுத தாக்குதல் என்ற மிரட்டலை எல்லாம் இந்தியா பொறுத்துக் கொள்ளாது. அணு ஆயுத தாக்குதல் என்கின்ற மிரட்டலோடு செயல்படுகின்ற பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நிச்சயமாக நடவடிக்கை எடுக்கும். மூன்றாவதாக, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடு மற்றும் பயங்கரவாத குழுக்கள் இவற்றை நாங்கள் வேறுபடுத்தி பார்க்கவில்லை.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் மூலம், பாகிஸ்தானின் உண்மையான ரூபம் என்ன என்று உலகம் பார்த்திருக்கிறது. கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டபோது, பாகிஸ்தான் ராணுவத்தின் மிகப் பெரிய அதிகாரிகள் அதில் கலந்துகொண்டனர். ஒரு நாட்டால் ஆதரிக்கப்படும் பயங்கரவாதத்திற்கு இதைவிட பெரிய சாட்சி என்ன இருக்கிறது.
நாங்கள் இந்தியா மற்றும் எங்களுடைய குடிமக்களுக்கு எந்தவிதமான ஆபத்தும் ஏற்படாத வண்ணம் திடமான முடிவுகளை எடுப்போம். யுத்த பூமியில் நாங்கள் ஒவ்வொரு முறையும் பாகிஸ்தானை தவிடுபொடியாக்கி இருக்கிறோம். மேலும், இந்த முறை ஆபரேஷன் சிந்தூர் ஒரு புதிய கோணத்தை சேர்த்திருக்கிறது. நாங்கள் பாலைவனங்கள், மலைகள் மீது எங்களுடைய திறமையை மிகச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறோம்.
மேலும், புது யுக யுத்தத்தில் எங்களது திறமையை காண்பித்திருக்கிறோம். இந்த ஆபரேஷன் மூலமாக நம்முடைய இந்தியாவிலேயே தயாரிப்போம் முறையில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் திறமை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. 21-ம் நூற்றாண்டின் போர் முறைகளில் இந்தியாவின் போர்க் கருவிகள் எப்படி இருக்கின்றன என்பதை இன்று உலகம் பார்த்துக்கொண்டிருக்கிறது.
இந்த மாதிரியான பயங்கரவாதத்துக்கு எதிராக நாம் எப்போதும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும். நம்முடைய ஒற்றுமை, நம்முடைய மிகப்பெரிய சக்தியாகும். உண்மையில் இந்த யுகம், போருக்கானது அல்ல. ஆனால், இந்த யுகம் பயங்கரவாதத்துக்கானதும் அல்ல. பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை என்பது ஒரு நல்ல உலகத்துக்கு உறுதி அளிக்கிறது.
பாகிஸ்தானின் ராணுவம், பாகிஸ்தானின் ஆட்சி எந்த வகையில் பயங்கரவாதத்துக்கு துணைபோகின்றதோ அது ஒருநாள் பாகிஸ்தானை முடிவுக்கு கொண்டுவரும். பாகிஸ்தான் தப்பிக்கவேண்டும் என்றால், தம் நாட்டில் உள்ள பயங்கரவாத கட்டமைப்புகளை சுத்தப்படுத்த வேண்டும். இதை தவிர, அமைதிக்கு வேறு வழியே இல்லை.
இந்தியாவின் நிலைப்பாடு மிகவும் தெளிவானது. பயங்கரவாதமும் அமைதிப் பேச்சுவார்த்தையும் ஒருங்கே செல்லவியலாது. பயங்கரவாதமும், வணிகமும் ஒருங்கே செல்லவியலாது. மேலும், தண்ணீரும், ரத்தமும் ஒருசேர பாய முடியாது.
நான் இன்று உலக சமுதாயத்துக்கு ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். எங்களுடைய அறிவிக்கப்பட்ட நீதி என்னவென்றால், பாகிஸ்தானுடன் ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்தால், அது பயங்கரவாதம் பற்றிதான் இருக்கும். ஒருவேளை பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்திருக்கின்ற காஷ்மீரை பற்றியதாக இருக்கும்.
இன்று புத்த பூர்ணிமா. பகவான் புத்தர் நமக்கு அமைதியின் பாதையை காட்டியிருக்கிறார். அமைதியின் பாதை பலத்தோடுதான் செல்கிறது. மனிதகுலம் அமைதி மற்றும் வளர்ச்சியின் பாதையில் நடக்கவேண்டும்.
ஒவ்வொரு இந்தியரும் அமைதியோடு வாழ வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியா என்கின்ற நம்முடைய கனவு நிறைவேறவேண்டும். இதற்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்கவேண்டியது அவசியம். மேலும், தேவை ஏற்படும்போது இந்த சக்தியை நாம் பயன்படுத்த வேண்டும். மேலும், கடந்த சில நாட்களில் இந்தியா இதைதான் செய்திருக்கிறது.
நான் மீண்டும் ஒருமுறை இந்திய ராணுவம் மற்றும் ஆயுதப் படைகளுக்கு வணக்கம் செலுத்துகிறேன். மக்களின் நம்பிக்கைக்கும், ஒற்றுமைக்கும் வணக்கம் செலுத்துகிறேன். நன்றி” என்று பிரதமர் மோடி பேசினார்.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவிய பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 22-ம் தேதி கொடூர தாக்குதல் நடத்தி சுற்றுலா பயணிகள் உட்பட 26 பேரை சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையை இந்திய ராணுவம் கடந்த 7-ம் தேதி மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 9 தீவிரவாத முகாம்கள் மீது குண்டுகளை வீசியது. இதில், 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
மறுநாள், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் உள்ள 15 முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணை மற்றும் 400 ட்ரோன்களை பாகிஸ்தான் வீசியது. இந்தியா தனது அதிநவீன ஆயுதங்களான எல்-70 பீரங்கி, சில்கா பீரங்கி, எஸ்-400 (சுதர்சன சக்கரம்) உள்ளிட்டவற்றால் பாகிஸ்தானுக்கு கடுமையாக பதிலடி கொடுத்தது.
பாகிஸ்தான் வீசிய ட்ரோன்கள், ஏவுகணைகளை இந்திய படைகள் வெற்றிகரமாக நடுவானிலேயே தகர்த்து அழித்து,பாகிஸ்தானின் பதில் தாக்குதலை முறியடித்தன. பாகிஸ்தானின் 3 முக்கிய விமான தளங்கள் உட்பட 8 ராணுவ மையங்களை குறிவைத்து, இந்திய போர் விமானங்கள் கடந்த 10-ம் தேதி காலை தாக்குதல் நடத்தின. இதில் பாகிஸ்தானுக்கு பலத்த சேதம் ஏற்பட்டது.
இந்தச் சூழலில், இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தீவிரம் அடைந்ததால், அமெரிக்க அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக போர் நிறுத்தம் செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். போர் நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, இந்தியாவும் சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, போர் நிறுத்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் பாகிஸ்தானும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், போர் நிறுத்தம் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் வகித்தது குறித்து பிரதமர் மோடி தனது உரையில் எதுவும் குறிப்பிடவில்லை.