புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர் 2-வது முறையாக அமெரிக்கா சென்றுள்ளார். புளோரிடா மாகாணம் டம்பா நகரில், தொழிலதிபரும் கவுரவ தூதருமான அட்னன் ஆசாத் அசிம் முனீருக்கு நேற்று முன்தினம் இரவு விருந்து அளித்தார்.
அந்நிகழ்ச்சியில் முனீர் பேசியதாவது: சிந்து நதி நீர் இந்தியாவின் சொத்து அல்ல. அந்த நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு வரும் தண்ணீரை தடுத்து நிறுத்த இந்தியா அணை கட்டினால், அதை ஏவுகணைகள் மூலம் தகர்ப்போம். நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு. வருங்காலத்தில் இந்தியாவுடன் போர் மூண்டு, அதில் நாங்கள் வீழ்ச்சி அடைகிறோம் என்று நினைத்தால், உலகின் பாதியையும் அழித்துவிடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அசிம் முனீர் தெரிவித்த கருத்தை கவனத்தில் கொண்டுள்ளோம். அணு ஆயுத அச்சுறுத்தல் என்பது பாகிஸ்தானின் வழக்கமான தந்திரம். அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்பதை இந்தியா ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது.
அமெரிக்க மண்ணில் இருந்தபடி, அசிம் முனீர் அணு ஆயுத மிரட்டல் விடுத்திருப்பது, பாகிஸ்தான் என்பது அணு ஆயுதங்களைக் கொண்ட பொறுப்பற்ற நாடு என்பதைக் காட்டுகிறது. அந்த நாட்டின் அணு ஆயுதங்கள் அரசுசாரா அமைப்புகளின் (தீவிரவாத) கைகளில் கிடைப்பதற்கான ஆபத்து உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அசிம் முனீர் கருத்தை சமூக ஊடகவாசிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். “முனீர் கருத்தில் உள்ள ஓர் உண்மை என்ன வென்றால், இந்தியா மெர்சிடிஸ் என்றும் பாகிஸ்தான் குப்பை லாரி என்றும் கூறியிருப்பதுதான். மற்றவை எல்லாம் மாயை’’ என ஒருவர் பதிவிட்டுள்ளார். மற்றொருவர், “இந்தியா என்பது முழுக்க முழுக்க ஏவுகணைகளால் நேரடியாகவே கொல்லும் வல்லமை கொண்ட ஒரு மிருகம். அது உங்களை முற்றிலும் நசுக்கிவிடும்’’ என பதிவிட்டுள்ளார்.