பாட்னா: பிஹாரில் தொழில்களை மேம்படுத்தவும், இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் சிறப்பு பொருளாதார தொகுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார். இதன் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து நிதிஷ்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “2020 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளின் கீழ், 50 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் மற்றும் பல்வேறு வேலைவாய்ப்புகளை வழங்கும் இலக்கை எங்கள் அரசாங்கம் நிறைவேற்றியது.
தற்போது, எங்கள் அரசாங்கம் அடுத்த 5 ஆண்டுகளில் 1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளது. பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலம் மாநிலத்தில் புதிதாக தொழில் தொடங்குபவர்களை அரசாங்கம் ஊக்குவிக்கிறது. இப்போது, பிஹாரில் தொழில்களை அமைக்கும் தொழில்முனைவோருக்கு ஒரு சிறப்பு பொருளாதார தொகுப்பு வழங்கப்படும்.
பிஹாரில் தொழில்களை அமைக்கவும், தனியார் துறைகளை ஊக்குவிக்கவும் அரசாங்கம் “சிறப்பு பொருளாதார தொகுப்பு” வழங்க முடிவு செய்துள்ளது. இதன் கீழ், மூலதன மானியம், வட்டி மானியம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றிற்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை இரட்டிப்பாக்கப்படும். அதிக வேலைவாய்ப்புகளை வழங்கும் தொழில்களுக்கு இலவசமாக நிலம் வழங்கப்படும்.
தொழில்துறைகளை அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பான தகராறுகள் தீர்க்கப்படும். இந்த வசதிகள் அனைத்தும் அடுத்த 6 மாதங்களுக்குள் தொழில்களை அமைக்கும் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும். மேலும், மாநிலத்தில் தொழில்களை அமைக்கும் தொழில்முனைவோருக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்படும்.
பிஹாரில் தொழில்களை மேம்படுத்துவது, பிஹார் இளைஞர்கள் திறமையானவர்களாகவும், தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் மாறுவதை உறுதி செய்வது, அதிகபட்ச வேலை வாய்ப்புகளை உருவாக்குவது மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பது ஆகியவை மாநில அரசின் இந்த முயற்சியின் நோக்கமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு இறுதியில் பிஹார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் சமீப காலமாக பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.