மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். “அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானதாக இருக்கும். நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது” என முதல்வர் தெரிவித்துள்ளார்.
தலைநகர் மும்பை உட்பட மகாராஷ்டிராவின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்தது. இதனால், மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சித்தூர்க், நான்டெட், வாஷிம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக மும்பையின் பல்வேறு சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை மழை வெள்ளத்தால் 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பேரிடர் மேலாண்மைத் துறையுடன் இணைந்து முதல்வர் தேவேந்திர ஃபட்னவிஸ், வெள்ள நிலைமையை ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “மும்பை, தானே, ராய்காட், ரத்னகிரி, சிந்தூர்க் மாவட்டங்களுக்கு அடுத்த 48 மணி நேரம் மிக முக்கியமானதாக இருக்கும். நிர்வாகம் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. தாழ்வான பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வெளியேறுவதை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன” என தெரிவித்தார்.
பேரிடம் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை அதிகாரி கூறுகையில், “நான்டெட் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களில் இருந்து 290-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் ராணுவம் இப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
புனேவைச் சேர்ந்த இந்திய வானிலை ஆய்வு மைய மூத்த விஞ்ஞானி எஸ்.டி. சனப், “வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாகவே மகாராஷ்டிராவில் கொங்கன், மத்திய மகாராஷ்டிரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதேநேரத்தில், மாநிலத்தின் பிற பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.” என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, மும்பை உட்பட கொங்கன், மத்திய மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், மராத்வாடா, விதர்பா பகுதிகளுக்கு வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.
மழை பாதிப்புகளை ஆய்வு செய்த துணை முதல்வர் அஜித் பவார், “இடைவிடாத மழையால் மாநிலத்தில் கிட்டத்தட்ட 10 லட்சம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன. மழை நின்றவுடன் சேத மதிப்பு தொடங்கப்படும்.” என்று கூறினார் .
தொடர் கனமழை காரணமாக மகாராஷ்டிராவின் முக்கிய ஆறுகள் நிரம்பி வழிவதாகவும், ஆயிரக்கணக்கான ஹெக்டேர் விளை நிலங்களில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.