புதுடெல்லி: அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் கடந்த 2023-ல் குற்றம்சாட்டியது. இதனால், அதானி குழும பங்குகள் சரிந்தன.
இதுகுறித்து இந்திய பங்குச் சந்தை பரிவர்த்தனை வாரியம் (செபி) விசாரணை நடத்தியது. இரண்டு ஆண்டு விசாரணைக்குப் பிறகு, அதானி குழுமம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரம் இல்லை என கடந்த சில தினங்களுக்கு முன்பு செபி தெரிவித்தது.
இதுகுறித்து அதானி குழும தலைவர் கவுதம் அதானி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்தின் குற்றச்சாட்டுகளால், உலகம் எங்கள் குழுமத்தைப் பற்றி விவாதம் நடத்திக் கொண்டிருந்தன. இதற்கு நடுவே, எங்கள் துறைமுகங்கள் விரிந்தன, மின் நிலையங்கள் தடையின்றி இயங்கின. அனைத்து நிறுவனங்களும் தொடர்ந்து முன்னேறி வந்தன.
இதற்கு ஊழியர்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கிய பங்கு வகித்தது. பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் தனது செயல்பாடுகளை சிறப்பாக நிறைவேற்றிய எங்கள் குழுமத்தின் திறன், அதன் உண்மையான பண்பை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இந்நிலையில் ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் செபி நிராகரித்துள்ளது. இதன் மூலம் கடந்த 2 ஆண்டுகளாக அதானி குழுமம் மீது சூழ்ந்திருந்த மேகங்கள் விலகிவிட்டன. இனி அதானி குழுமம் அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணம் செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.