அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தின் அருகில் இன்று விமானம் விபத்துக்குள்ளான நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் சமூக ஊடக தளங்களில் தனது சுயவிவரப் படத்தை கருப்பு வண்ணத்தில் மாற்றியுள்ளது.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் இந்த விமானத்தில் பயணித்தனர்.
விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மெகானி பகுதியில் விபத்துக்குள்ளான இந்த விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் முதல் அதிகாரி கிளைவ் குந்தர் ஆகியோர் இயக்கினர். ஏர் இந்தியா நிறுவனம் தனது சமூக வலைதள பக்கங்களில், “அகமதாபாத் – லண்டன் கேட்விக் விமானம் AI171, இன்று (ஜூன் 12, 2025) விபத்துக்குள்ளானது. இந்த நேரத்தில், நாங்கள் விவரங்களை உறுதிசெய்து வருகிறோம், மேலும் விரைவில் கூடுதல் புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்வோம்” என்று தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தனது எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் பங்கங்களில் சுயவிவர படத்தினை கருப்பு வண்ணத்தில் மாற்றியுள்ளது. இந்த விபத்தைத் தொடர்ந்து சம்பவம் நடந்த பகுதிக்கு ஏழு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன. அதேபோல காந்திநகரில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படையின் 90 பணியாளர்கள் கொண்ட மூன்று குழுக்கள் விபத்து நடந்த இடத்துக்கு அனுப்பப்பட்டன. மேலும், வதோதராவிலிருந்து கூடுதல் மூன்று குழுக்கள் திரட்டப்பட்டு வருகின்றன. | முழுமையாக வாசிக்க > அகமதாபாத்தில் 242 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து – மீட்புப் பணிகள் தீவிரம்