புதுடெல்லி: அகமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானம், மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது மோதியுள்ளது. அங்கு, உணவுடன் கூடிய தட்டுகள் மற்றும் தண்ணீர் டம்ளர்கள் மேசையில் மீது இருப்பது தொடர்பான புகைப்படங்கள் காண்போரை கண்கலங்க செய்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு இன்று மதியம் 1.38-க்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-7 விமானம், புறப்பட்ட 5 நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியது. இந்த விமானத்தில், பயணித்த 242 பேரில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்கள், 7 பேர் போர்ச்சுக்கீசிய நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் என்று ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
அகமதாபாத்தின் மேகானி நகரில் உள்ள பி.ஜே. மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தின் மீது விமானம் மோதியதில் கடுமையான சேதம் ஏற்பட்டுள்ளது. 5 மருத்துவ மாணவர்கள் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமடைந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் கூறுகின்றன. இதில் நான்கு பேர் இளங்கலை மாணவர்கள் மற்றும் ஒருவர் முதுகலை மாணவர் என்றும் கூறப்படுகிறது.
மாணவர்கள் உணவு சாப்பிடும் நேரத்தில் விடுதி மீது விமானம் விழுந்துள்ளதாக தெரிகிறது. உணவுடன் கூடிய தட்டுகள் மற்றும் தண்ணீர் டம்ளர்கள் மேசையில் மீது இருப்பது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம், பல கனவுகளை சுமந்து திரிந்த, அம்மாணவர்களின் துயர நிலையை எடுத்துரைக்கிறது.
அகமதாபாத் விமான விபத்து தொடர்பான கூடுதல் தகவல்களை பெற ஏர் இந்தியா 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆதரிப்பதே இப்போது முதன்மையானது என்று ஏர் இந்தியாவின் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். “அகமதாபாத்தில் நிகழ்ந்த விமான விபத்து கடும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. மீட்புப் பணிகள் குறித்து தொடர் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.
“இந்தியாவுக்கு 2025 பயங்கரமான ஆண்டாக மாறுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதல், பாகிஸ்தானுடனான போர், பெங்களூருவில் கூட்ட நெரிசல், உள்ளூர் குற்றங்கள் மற்றும் இப்போது அகமதாபாத் விமான விபத்தில் பலர் இறந்துள்ளனர்,” என்று ஒருவர் பதிவிட்டுள்ளார். | முழுமையாக வாசிக்க > அகமதாபாத்தில் 242 பேருடன் புறப்பட்ட விமானம் விபத்து – மீட்புப் பணிகள் தீவிரம்