Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Thursday, July 3
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»தேசியம்»அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்புகள் முதல் போயிங் நிறுவன விளக்கம் வரை
    தேசியம்

    அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்புகள் முதல் போயிங் நிறுவன விளக்கம் வரை

    adminBy adminJune 12, 2025No Comments5 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அகமதாபாத் விமான விபத்து: உயிரிழப்புகள் முதல் போயிங் நிறுவன விளக்கம் வரை
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. அதில் பயணித்தவர்களில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் பலத்த தீ காயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். சமீப காலத்தில் நடந்த மிகப் பெரிய கோர விபத்து இது.

    வேகமாக வளர்ந்து வரும் அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியாழக்கிழமை மதியம் 1.38 மணிக்கு புறப்பட்டது ஏர் இந்தியாவின் 171 என்ற போயிங் ரக விமானம். கேப்டன் சுமித் சபர்வால், துணை விமானி கிளைவ் குந்தர் ஆகியோர் விமானத்தை இயக்கினர். போயிங் 787-8 ட்ரீம்லைனர் எனும் இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் பிரிட்டன் நாட்டையும், 7 பேர் போர்ச்சுகீஸ் நாட்டையும், ஒருவர் கனடாவையும் சேர்ந்தவர்கள்.

    விமானம் சரியாக 1.38 மணிக்கு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டதாகவும், புறப்பட்ட 5 நிமிடங்களில் விபத்துக்குள்ளானதாகவும் ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துக்குள்ளான விமானத்தின் முன்பகுதி, அகமதாபாத் மேகனிநகர் பகுதியில் பிஜே மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்கள் விடுதியின் கூரையின் மீது விழுந்தது.

    பயங்கர வெடிச்சத்தத்துடன் விமானம் விழுந்ததை அடுத்து, தீ மளமளவென்று பற்றி எரிந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். பல மீட்டர் தொலைவுக்கு கரும்புகை வெளியேறியது. இந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து ஒன்பதரை மணி நேரம் பயணித்து லண்டன் செல்லக்கூடியது என்பதால், விமானத்தில் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

    மீட்பு பணிகள்: விமானம் விபத்துக்குள்ளான தகவல் கிடைத்ததும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறையினர், தீ அணைப்புத் துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தீ அணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. 204 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 41 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டதாகவும் அகமதாபாத் மாநகர காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்துள்ளார். எனினும், உயிரிழப்பு தொடர்பாக ஏர் இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோரும் விமானம் விழுந்த மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்தவர்கள் எனத் தெரிகிறது.

    குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி மரணம்: அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்த தகவலை மத்திய அமைச்சர் சி.ஆர் பாட்டீல் உறுதி செய்துள்ளார். தனது மகளை சந்திக்க அவர் இன்று மதியம் லண்டன் புறப்பட்டதாக தகவல். பிசினஸ் கிளாஸ் பிரிவில் அவர் விமானத்தில் பயணித்தார்.

    உயிரி பிழைத்த ஒருவர் – இந்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். பயணி ஒருவர் உயிர் பிழைத்ததை அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் உறுதி செய்துள்ளார். “11ஏ இருக்கையில் பயணித்த பயணி ஒருவரை போலீஸார் உயிரோடு இருப்பதை அடையாளம் கண்டனர். இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து இப்போது எதுவும் கூற முடியாது. குடியிருப்பு பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்” என அவர் தெரிவித்தார். 11ஏ இருக்கையில் பயணித்த பயணியின் பெயர் ரமேஷ் விஷ்வகுமார் என்றும், அவருக்கு வயது 38 என்றும் தகவல் வெளியாகி உள்ளது

    ஏர் இந்தியா வெளியிட்ட தகவல்: விபத்து குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் முதலில் உறுதிப்படுத்திய ஏர் இந்தியா, பின்னர், விபத்தில் எந்தெந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் எத்தனை எத்தனை பேர் இருந்தார்கள் என்பது பற்றி விவரத்தையும், உறவினர்கள் தொடர்புகொள்ள வேண்டிய உள்நாட்டு ஹட்லைன் எண் 1800 5691 444-யும், வெளிநாட்டவர்கள் தொடர்பு கொள்வதற்கு +91 8062779200 என்ற மொபைல் எண்ணையும் வெளியிட்டது.

    மாநில அரசு மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையை திறந்து, தொடர்பு எண்களை அறிவித்தது. லேண்ட்லைன்: 079-23251900, மொபைல்: 99784 05304, காவல் துறை உதவி எண்: 079-25620359 ஆகிய எண்கள் அறிவிக்கப்பட்டன.

    அறிவுறுத்தல் வழங்கிய பிரதமர்: விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோரைத் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களைத் தெரிந்து கொண்டதோடு, இருவரையும் உடனடியாக அகமதாபாத் விரையுமாறு கேட்டுக்கொண்டார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் விரைவாக கிடைப்பதை உறுதிப்படுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

    விபத்து குறித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அகமதாபாத்தில் நடந்த துயரச் சம்பவம் எங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயத்தை உடைத்துள்ளது. இந்த சோகமான நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைவருடனும் எனது எண்ணங்கள் உள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகப் பணியாற்றும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளேன்” என தெரிவித்துள்ளார்.

    உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அகமதாபாத்தில் நடந்த துயரமான விமான விபத்தால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு வேதனை அடைந்துள்ளேன். விபத்து நடந்த இடத்திற்கு பேரிடர் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். நிலைமையை மதிப்பிடுவதற்காக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்கவி மற்றும் அகமதாபாத் காவல் ஆணையர் ஆகியோருடன் பேசினேன்” என தெரிவித்தார்.

    குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமான விபத்து குறித்து நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன். விபத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், காயமடைந்த பயணிகளுக்கு உடனடி சிகிச்சைக்கான ஏற்பாடுகளை போர்க்கால அடிப்படையில் செய்யவும் அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன்.

    காயமடைந்த பயணிகளை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல ஒரு பசுமை வழித்தடத்தை ஏற்பாடு செய்யவும், மருத்துவமனையில் அனைத்து சிகிச்சை ஏற்பாடுகளையும் முன்னுரிமை அடிப்படையில் உறுதி செய்யவும் நான் அறிவுறுத்தியுள்ளேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்னிடம் பேசினார். இந்த விமான விபத்தில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு தேசிய பேரிடர் மீட்புப் படை குழுக்கள் மற்றும் மத்திய அரசின் முழு ஆதரவையும் உறுதி செய்தார்” என குறிப்பிட்டிருந்தார்.

    சம்பவ இடத்தில் அமைச்சர் ஆய்வு: அகமதாபாத் விரைந்த சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு, சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “துயரமான மற்றும் கொடூரமான இந்த சம்பவத்தால் நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்துள்ளேன். நான் இன்னமும் அதிர்ச்சியில் இருக்கிறேன். பிரதமர் என்னை அழைத்து சம்பவ இடத்தில் இருக்குமாறு கேட்டுக் கொண்டார். இந்த நேரத்தில், பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரைப் பற்றி மட்டுமே என்னால் நினைக்க முடிகிறது.

    பல நிறுவனங்கள் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. எவ்வளவு பேர் இறந்தார்கள் என்பது குறித்து நான் இப்போதைக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை. நாங்கள் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம். மத்திய உள்துறை அமைச்சரும் இங்கு சம்பவ இடத்திற்கு வருகிறார். (பாஜக தலைவர்) விஜய் ரூபானியும் விமானத்தில் இருந்தார் என்பதை அறிந்து மிகவும் வருத்தமாக இருக்கிறது. மற்ற நாட்டவர்களும் அதில் இருந்தனர். நாங்கள் நியாயமான மற்றும் முழுமையான விசாரணையை மேற்கொள்ளப் போகிறோம். இந்த சம்பவம் ஏன் நடந்தது என்பதன் அடி ஆழம் வரை செல்வோம்” என தெரிவித்தார்.

    தற்காலிகமாக நிறுத்தப்பட்ட விமான நிலைய செயல்பாடு: இந்த விபத்தை அடுத்து, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தின் (எஸ்.வி.பி.ஐ.ஏ) செயல்பாடு தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை சரிபார்ப்புகளை அடுத்து விமான நிலையம் வழக்கம்போல் செயல்படத் தொடங்கியது.

    இந்த விபத்து குறித்து ஏர் இந்தியா தலைவர் என் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 171, இன்று ஒரு துயர விபத்தில் சிக்கியதை ஆழ்ந்த துக்கத்துடன் உறுதிப்படுத்துகிறேன். இந்தப் பேரழிவு தரும் நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கல்களும் உள்ளன.

    இந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆதரிப்பதே எங்கள் முதன்மை கவனம். சம்பவ இடத்தில் அவசரகால மீட்புக் குழுக்களுக்கு உதவவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் பராமரிப்பையும் வழங்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மேலும் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கும்போது மேலும் புதுப்பிப்புகள் பகிரப்படும். அவசர மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தகவல் தேடும் குடும்பங்களுக்கு ஆதரவு குழு அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

    போயிங் நிறுவனம் விளக்கம்: இந்த விபத்து குறித்து போயிங் வெளியிட்ட அறிக்கையில், “ஆரம்பகட்ட அறிக்கைகள் கிடைத்துள்ளன. மேலும், தகவல்களை சேகரிக்க தொடர்ந்து ஏர் இந்தியா நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. இதனிடையே, பங்குச் சந்தையில் போயிங் நிறுவன பங்குகள் வெகுவாக சரிந்துள்ளன.

    டாடா குழுமம் நிவாரண நிதி அறிவிப்பு: “ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது மிகுந்த வேதனை அளிக்கிறது. எங்கள் துயரத்தை வெளிப்படுத்த எங்களிடம் வார்த்தைகள் இல்லை. தங்களது அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்கள், காயமடைந்தவர்கள் சார்ந்தே எங்களது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் டாடா குழுமம் ரூ.1 கோடி வழங்கும். காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளையும் நாங்கள் ஏற்கிறோம். அவர்களுக்கான சிகிச்சையை உறுதி செய்வோம். விபத்தில் சேதமடைந்த பி.ஜே மருத்துவக் கல்லூரி விடுதி கட்டிடத்தை புனரமைப்பதில் எங்களது பங்கு இருக்கும்” என்று டாடா குழுமம் தெரிவித்துள்ளது.

    The entire sequence of Air India Flight 171from takeoff to the crash was captured on CCTV.

    The footage shows a clear and sudden loss of lift just seconds after the aircraft left the ground. pic.twitter.com/M04DIYu7Wg

    — IndiaWarMonitor (@IndiaWarMonitor) June 12, 2025



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    தேசியம்

    இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்

    July 3, 2025
    தேசியம்

    விவசாயிகள் கடனில் மூழ்குகிறார்கள்; அரசு அலட்சியமாக இருக்கிறது: ராகுல் காந்தி

    July 3, 2025
    தேசியம்

    தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி

    July 3, 2025
    தேசியம்

    பிஹார் மாநிலத்தில் இளைஞர்களுக்கு உதவித் தொகையுடன் தொழிற்பயிற்சி

    July 3, 2025
    தேசியம்

    இந்தியா – அமெரிக்கா இடையே கையெழுத்தாகிறது 10 ஆண்டு பாதுகாப்பு கட்டமைப்பு ஒப்பந்தம்

    July 3, 2025
    தேசியம்

    தீவிரவாத தாக்குதலில் 3 இந்தியர்கள் கடத்தல்: பத்திரமாக மீட்க மாலி அரசுக்கு இந்தியா கோரிக்கை

    July 3, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மிளகுக்கீரை எண்ணெய் Vs ரோஸ்மேரி எண்ணெய்: உடனடி முடி வளர்ச்சிக்கு எது சிறந்தது?
    • இமாச்சலப் பிரதேசத்தில் கனமழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழப்பு – மீட்புப் பணிகள் தீவிரம்
    • “இந்தியாவில் ஜனநாயகம் என்பது வெறும் அமைப்பு அல்ல” – கானா நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரை
    • அஜித்குமார் படுகொலை: ஐஜி அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவு
    • பெருங்குடல் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் ஒருவர் ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது

    Recent Comments

    No comments to show.

    Archives

    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.