புதுடெல்லி: குஜராத்தின் அகமதாபாத்தில் 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளான நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லுமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு ஆகியோருக்கு பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளாகியது.
விபத்தை அடுத்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொலைபேசியில் பேசிய பிரதமர்: விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இருவரையும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ராம்மோகன் நாயுடு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடமும் பேசினார். விபத்து குறித்த தகவல்களைக் கேட்டறிந்தார். விரைவாக அகமதாபாத் செல்லுமாறும், தேவையான அனைத்து உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் பிரதமர், அமைச்சருக்கு உத்தரவிட்டார். மேலும் நிலைமை குறித்து தொடர்ந்து தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். தொடர்புடைய அனைத்து ஏஜென்சிகளும் அதிக எச்சரிக்கையில் உள்ளன. மேலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் நடந்து வருகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விரையும் தேசிய பேரிடர் மீட்புப் படை: காந்திநகரிலிருந்து விமான விபத்து தளத்திற்கு 90 பணியாளர்களைக் கொண்ட மூன்று தேசிய பேரிடர் படை குழுக்கள் விரைந்துள்ளதாகவும், வதோதராவிலிருந்து மேலும் மூன்று குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. பயணிகள் விவரம் அறிய 1800 5691 444 என்ற பிரத்யேக ஹாட்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் செயல்படவில்லை: இந்த விபத்தை அடுத்து, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் (எஸ்.வி.பி.ஐ.ஏ) தற்போது செயல்படவில்லை என்றும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பூபேந்திர படேல்: “அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன்.” என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.