அகமதாபாத்: ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 6 பேரின் உடல்கள், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை தெரிவித்துள்ளது.
அகமதாபாத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு நேற்று மதியம் 1.38 மணிக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். உயிரிழந்த பயணிகள் மற்றும் மற்றவர்களின் உடல்கள் அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன.
இந்நிலையில், 6 பேரின் முகம் அப்படியே இருந்ததால், அந்த உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பிரதே பரிசோதனை நடைமுறைகளை கையாளும் ஆய்வாளர் சிராக் கோசாய் தெரிவித்துள்ளார். மேலும் அவர், “வியாழக்கிழமை விபத்துக்குப் பிறகு குறைந்தது 265 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டன. இவற்றில், ஆறு பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர். அவர்களின் முகம் அப்படியே இருந்ததால் அடையாளம் காண்பது எளிதாக இருந்தது. மற்றவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகிவிட்டதால், அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த டிஎன்ஏ விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
இறந்த 215 பேரின் உறவினர்கள் தங்கள் மாதிரிகளை வழங்க எங்களை அணுகியுள்ளனர். பிரேத பரிசோதனை அறைக்கு வரும் உறவினர்களிடமிருந்து விவரங்கள் சேகரிக்கப்பட்டு, பின்னர் அவர்கள் டி.என்.ஏ மாதிரிகளை வழங்க பி.ஜே மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்படுவார்கள். டி.என்.ஏ மாதிரிகளைப் பொருத்தும் பணியை முடிக்க கிட்டத்தட்ட 72 மணிநேரம் ஆகும். பொருத்தம் ஏற்பட்டவுடன், உடல்கள் பிரேத பரிசோதனை அறையில் இருந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த விபத்தில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 விமானப் பயணிகள் உயிரிழந்தனர். அதோடு, விமானம் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்த பலரும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.