புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் நாட்டவர்களின் உடல்களை ஒப்படைப்பதில் குளறுபடிகள் நடந்துள்ளதாக பிரிட்டன் ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு இந்திய வெளியுறவுத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். விமானம் மோதிய மருத்துவமனை விடுதியில் இருந்தவர்கள் உட்பட இந்த விபத்தில் மொத்தம் 260 பேர் உயிரிழந்தனர்.
விமானம் தீ பற்றி எரிந்ததில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு கருகியது. இதன் காரணமாக அத்தகைய உடல்கள் டிஎன்ஏ சோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விபத்தில், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த 53 பேர், போர்ச்சுகீஸ் நாட்டைச் சேர்ந்த 7 பேர், கனடாவைச் சேர்ந்த ஒருவர் ஆகியோரும் உயிரிழந்தனர். அவர்களின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில், பிரிட்டனுக்கு அனுப்பப்பட்ட சவப்பெட்டி ஒன்றில், அடையாளம் தெரியாத பயணி ஒருவரின் உடல் இருப்பதாகவும், இதனால் இறுதிச் சடங்கு கைவிடப்பட்டதாகவும் செய்தி வெளியானது. ஒரே சவப்பெட்டியில் ஒன்றுக்கு மேற்பட்ட உடல்களின் பாகங்கள் இருப்பதாக மற்றொரு குடும்பம் புகார் தெரிவித்திருந்தது. பாதிக்கப்பட்ட பல பிரிட்டன் குடும்ங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் விமான வழக்கறிஞர் ஜேம்ஸ் ஹீலி பிராட், “சிலர் தவறான உடல்களை பெற்றுள்ளனர். இது குறித்து அவர்கள் கலக்கமடைந்துள்ளனர். இரண்டு வாரங்களாக இது நடந்து வருகிறது. இந்த குடும்பங்களுக்கு விளக்கம் தேவை” என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “துயரமான விமான விபத்தைத் தொடர்ந்து நிறுவப்பட்ட நெறிமுறைகள் மற்றும் தொழில்நுட்பங்களின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் உடல்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் அனைத்து உடல்களும் மிகுந்த தொழில்முறையுடனும் கண்ணியத்துடனும் உரிய மரியாதையுடனும் கையாளப்பட்டன. இந்த விவகாரத்தில் எந்த ஒரு கவலையை நிவர்த்தி செய்யப்படும். இதற்காக நாங்கள் இங்கிலாந்து அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.