மும்பை: கடந்த மாதம் அகமதாபாத் நகரில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியது. இதில் 260 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த 166 பேரின் குடும்பங்களுக்கு இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை ஏர் இந்தியா விமான நிறுவனம் விடுத்துள்ளதாக தகவல்.
ஜூன் 12-ம் தேதி அன்று அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 ரக விமானம், மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டிடத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த 241 பேரும், விடுதியில் இருந்த 19 பேர் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் பயணித்தவர்களில் ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார்.
இந்த விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்துக்கும் டாடா குழுமம் ரூ.1 கோடி வழங்கும் என்று அறிவிக்கப்பட்டது. காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவு, அவர்களுக்கான சிகிச்சையை உறுதி செய்வோம் என்றும் டாடா அறிவித்தது. விபத்தில் சேதமடைந்த மருத்துவக் கல்லூரியின் விடுதி கட்டிடத்தை புனரமைப்பதில் டாடா குழுமத்தின் பங்கு இருக்கும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இடைக்கால இழப்பீடாக ரூ.25 லட்சத்தை விபத்தில் உயிரிழந்த 166 பேரின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியா விடுவித்துள்ளது. விமானத்தில் பயணித்தவர்களில் 147 பேரின் குடும்பத்துக்கும், விபத்து நடந்த இடத்தில் உயிரிழந்த 19 பேரின் குடும்பத்துக்கும் இந்த இடைக்கால இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், 52 பேருக்கு இடைக்கால இழப்பீடு வழங்குவதற்கான ஆவணங்களை சரிபார்த்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களுக்கான இடைக்கால இழப்பீடு விரைந்து வழங்கப்படும் என்றும். இது ரூ.1 கோடி இழப்பீட்டு அட்ஜெஸ்ட் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.