அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து 242 பேருடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதனை ஏர் இந்தியா நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. ஏஐ171 (AI)171 என்ற எண் கொண்ட விமானம் விபத்துக்குள்ளானது என்று எக்ஸ் பக்கத்தில் ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பிரிட்டன் தலைநகர் லண்டன் நோக்கி மதியம் 1:38 மணிக்கு புறப்பட்ட விமானம், 5 நிமிடங்களுக்குப் பிறகு விபத்துக்குள்ளானது. ஏர் இந்தியாவுக்குச் சொந்தமான போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், விமான நிலையத்துக்கு அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஏர் இந்தியா 171 என்ற எண் கொண்ட இந்த விமானத்தில் 230 பயணிகள், 12 பணியாளர்கள் என 242 பேர் பயணித்த நிலையில், அவர்களின் நிலை குறித்த தகவல்கள் கவலை அளிக்கும் விதமாக உள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தை அடுத்து, விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து நடந்த அகமதாபாத் குடியிருப்புப் பகுதியில் இருந்து தீப்பிழம்புடன் கரும்புகை பெருமளவில் வெளியானது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், தீ அணைப்புத் துறையினர் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த விமானம் அகமதாபாத்தில் இருந்து ஒன்பதரை மணி நேரம் பயணித்து லண்டன் செல்லக்கூடியது என்பதால், விமானத்தில் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. விமானம் விபத்துக்குள்ளானதும் தீப்பிடித்தது என்றும், தீ அணைப்பு வாகனங்கள் விரைந்துள்ளன என்றும் தீயணைப்பு அதிகாரி ஜெயேஷ் கடியா தெரிவித்தார்.
“விமான நிலையத்துக்கு அருகிலுள்ள மேகனிநகர் பகுதியில் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. மீட்புப் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது” என்று அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஜி.எஸ்.மாலிக் கூறினார். விமான விபத்து தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனடியாக குஜராத் முதல்வர், உள்துறை அமைச்சர் மற்றும் போலீஸ் கமிஷனரிடம் பேசியுள்ளார். சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க மத்திய அரசு தயாராக உள்ளதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
விமான விபத்து குறித்து தெரிவித்துள்ள சிவில் ஏவியேஷன் அமைச்சர் ராம் மோகன் நாயுடு “அகமதாபாத் விமான விபத்து பற்றி அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளேன். நாங்கள் அதிக எச்சரிக்கையுடன் இருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நிலைமையை நான் கண்காணித்து வருகிறேன். அவசர காலங்களில் செயல்பட வேண்டிய அனைத்து நிறுவனங்களையும் விரைவான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன்.
மீட்புக் குழுக்கள் திரட்டப்பட்டுள்ளன. மேலும், மருத்துவ உதவி மற்றும் நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் விமானத்தில் உள்ள அனைவர் குறித்தும் அவர்களின் குடும்பத்தினர் குறித்துமே இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.
விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படை: காந்திநகரிலிருந்து விமான விபத்து தளத்திற்கு 90 பணியாளர்களைக் கொண்ட 3 தேசிய பேரிடர் படை குழுக்கள் விரைந்துள்ளதாகவும், வதோதராவிலிருந்து மேலும் மூன்று குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் மீட்புப் படை தெரிவித்துள்ளது. பயணிகள் விவரம் அறிய 1800 5691 444 என்ற பிரத்யேக ஹாட்லைன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையம் செயல்படவில்லை: இந்த விபத்தை அடுத்து, அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் (எஸ்.வி.பி.ஐ.ஏ) தற்போது செயல்படவில்லை என்றும், மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து விமான நடவடிக்கைகளும் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
குஜராத் முதல்வர் தகவல் – “அகமதாபாத்தில் ஏர் இந்தியா பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான சம்பவத்தால் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளும்படி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சையளிக்க ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளேன்” என்று குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
விமானம் விழுந்த இடத்தின் நிலை என்ன? – விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் முன்பகுதி, அகமதாபாத் பிஜே மருத்துவக் கல்லூரியின் மருத்துவ மாணவர்கள் விடுதியின் கூரையின் மீது விழுந்தது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த விவரம் இன்னும் முழுமையாக வெளியாகவில்லை.
இது குறித்து பேசிய ஒரு மூத்த காவல் துறை அதிகாரி, “லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம், மருத்துவக்கல்லூரி மாணவர் விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக எங்களுக்குத் தெரிய வந்தது. 2-3 நிமிடங்களுக்குள் காவல் துறையினரும், பிற மீட்பு அமைப்புகளும் சம்பவ இடத்தை அடைந்தன. கிட்டத்தட்ட 70 – 80% பகுதியில் மீட்புப் பணிகள் நடந்துள்ளன. அனைத்து நிறுவனங்களும் இங்கு வேலை செய்கின்றன” என்றார். விமானம் ஒரு குடியிருப்புப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், அப்பகுதியில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்பட்டதா என்பது இன்னும் தெரியவரவில்லை.
விபத்து நடந்த இடத்திலிருந்து ஆம்புலன்ஸ்கள் செல்ல எளிதான வழிகள் அனைத்தும் தயாராக உள்ளன என்று அகமதாபாத் காவல் துறையினர் தெரிவித்தனர். காவல் துறையின் அறிக்கையில், “விமானம் ஒரு மருத்துவ மாணவர் விடுதி கட்டிடத்தின் மீது மோதியது. அனைத்து பத்திரிகையாளர்களும் எங்களுடன் ஒத்துழைக்குமாறும், காவல்துறையினரும், மற்ற மீட்புக்குழுவினரும் சாலைகளை தயார் நிலையில் வைக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். இதனால் நாங்கள் பசுமை வழித்தடத்தை உருவாக்க முடியும். அதேபோல ஆம்புலன்ஸ்கள் எளிதாக செல்லவும் அனுமதிக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொலைபேசியில் பேசிய பிரதமர்: விபத்து குறித்து தகவல் அறிந்ததும், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடமும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடமும் தொலைபேசியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இருவரையும் சம்பவ இடத்துக்கு விரைந்து செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்யுமாறு அவர்களை பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ராம்மோகன் நாயுடு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிரதமர் நரேந்திர மோடி, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடமும் பேசினார். விபத்து குறித்த தகவல்களைக் கேட்டறிந்தார். விரைவாக அகமதாபாத் செல்லுமாறும், தேவையான அனைத்து உதவிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைப்பதை உறுதிசெய்யுமாறும் பிரதமர், அமைச்சருக்கு உத்தரவிட்டார். மேலும் நிலைமை குறித்து தொடர்ந்து தகவல்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார். தொடர்புடைய அனைத்து ஏஜென்சிகளும் அதிக எச்சரிக்கையில் உள்ளன. மேலும் ஒருங்கிணைந்த முயற்சிகள் நடந்து வருகின்றன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் விவரம்: ஏர் இந்தியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அகமதாபாத்திலிருந்து லண்டன் கேட்விக் செல்ல வேண்டிய ஏர் இந்தியா 171 விமானம் புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது. அகமதாபாத்திலிருந்து மதியம் 13.38 மணிக்கு புறப்பட்ட இந்த போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணை நாங்கள் அமைத்துள்ளோம். இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது. ஏர் இந்தியா தனது எக்ஸ் பக்கத்திலும், என்ற தனது இணையதளத்திலும் வழக்கமான புதுப்பிப்புகள் மூலம் கூடுதல் தகவல்களை வெளியிடும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து ஏர் இந்தியா தலைவர் என் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் 171, இன்று ஒரு துயர விபத்தில் சிக்கியதை ஆழ்ந்த துக்கத்துடன் உறுதிப்படுத்துகிறேன். இந்த பேரழிவு தரும் நிகழ்வால் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுடன் எங்கள் எண்ணங்களும் ஆழ்ந்த இரங்கல்களும் உள்ளன.
இந்த நேரத்தில், பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் அவர்களது குடும்பத்தினரையும் ஆதரிப்பதே எங்கள் முதன்மை கவனம். சம்பவ இடத்தில் அவசரகால மீட்புக் குழுக்களுக்கு உதவவும், பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் பராமரிப்பையும் வழங்கவும் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம். மேலும் சரிபார்க்கப்பட்ட தகவல்கள் எங்களுக்குக் கிடைக்கும்போது மேலும் புதுப்பிப்புகள் பகிரப்படும். அவசர மையம் செயல்படுத்தப்பட்டுள்ளது மற்றும் தகவல் தேடும் குடும்பங்களுக்கு ஆதரவு குழு அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் பிரதமர் கூறியது என்ன? – விமான விபத்தை அடுத்து பிரிட்டனர் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “பிரிட்டிஷ் குடிமக்கள் பலருடன் லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் இந்தியாவின் அகமதாபாத் நகரில் விபத்துக்குள்ளாகி பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. நிலைமை குறித்து எனக்குத் தொடர்ந்து தகவல் கிடைத்து வருகிறது, இந்த ஆழ்ந்த துயரமான நேரத்தில் பயணிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீது எனது எண்ணங்கள் உள்ளன” என தெரிவித்துள்ளார்.
லூசி பவல்: விபத்து குறித்து பிரிட்டன் நாடாளுமன்றத்தில் பேசிய ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் லூசி பவல், “இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து லண்டன், கேட்விக் புறப்பட்ட ஏர் இந்தியா 171 விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் பயணித்தவர்களின் குடும்பங்களுடன் முழு சபை மற்றும் அரசாங்கத்தின் எண்ணங்களும் இருக்கும். இது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளிவரும்.
இது சந்தேகத்துக்கு இடமின்றி இங்குள்ள பல குடும்பங்களுக்கும், தங்கள் அன்புக்குரியவர்களின் வருகைக்காகக் காத்திருப்பவர்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தும். இந்த அனைத்து குடும்பங்களுக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபத்தையும் எண்ணங்களையும் பகிர்கிறோம். மேலும், இந்தியாவில் உள்ளவர்களுக்கும், இந்த நாட்டில் உள்ளவர்களுக்கும் அரசாங்கம் அனைத்து உறுதுணையாக இருப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அகமதாபாத் விமான நிலையம்: குஜராத்தின் அகமதாபாத்திற்கு வடக்கே 9 கி.மீ தொலைவில் உள்ள ஹன்சோலில் அமைந்துள்ள ஒரு பெரிய சர்வதேச விமான நிலையமான சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம், நாட்டின் 7-வது பரபரப்பான விமான நிலையமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. தினமும் சுமார் 245 விமானங்கள் வந்து செல்கின்றன.
2024-25-ஆம் ஆண்டில் அகமதாபாத் விமான நிலையம் 1.30 கோடிக்கும் அதிகமான பயணிகளுக்கு சேவை செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 14.8% அதிகம். 2023-24 ஆம் ஆண்டு வரை இந்த விமான நிலையத்தில் ஒரு லட்சம் டன்களுக்கும் அதிகமான சரக்குகள் கையாளப்பட்டன. நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் இங்கிருந்து விமானங்கள் பயணிக்கின்றன. உலகளவில் 80-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்தில் மொத்தம் 21 விமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், இண்டிகோ முன்னணியில் உள்ளது.
2026-ஆம் ஆண்டுக்குள் விமான பயணிகள் போக்குவரத்து ஆண்டுதோறும் 1.98 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 2 கோடி பயணிகளை கையாளும் திறன் கொண்ட புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டிடத்தை விமான நிலையம் திறக்க உள்ளது. இந்தத் திட்டத்துக்கு அதானி அகமதாபாத் சர்வதேச விமான நிலைய லிமிடெட் (AAIAL) ரூ. 31.30 பில்லியன் முதலீடு செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.