‘சினிமா என்பது கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான ஒன்று’ என்கிறார் பிரெஞ்சு புதிய அலை திரைப்பட இயக்கத்தின் முன்னோடி, கோதார்த். அவர் சொல்வது போல கலைக்கும் வாழ்க்கைக்கும் இடையில் ஏராளம் உண்டு. இந்த ‘ஏராள’த்தில் உருவாகும் சினிமா கதைகள், கற்பனைக்கு உட்பட்டதும் அதற்கு அப்பாற்பட்டதுமாக இருக்கின்றன. அப்படி உருவான திரைப்படங்களில் 1930-ல் இருந்து 1960-க்குள் வெளியான ‘எட்ஜ் ஆஃப் தி சீட்’ என்றழைக்கப்படும் கிளாசிக் குற்றப் படங்கள் பற்றி இங்கு எழுதுகிறார், திரைப்பட இயக்குநர் ராம்குமார் சுப்பாராமன்.
சினிமா ரசிகர்களுக்கு எப்போதும் அலுக்காத திரைப்படங்கள் ‘எவர்க்ரீன் சப்ஜெக்ட்ஸ்’ எனப்படும் காதல் படங்கள். ஆனால் காதலுக்கு
இணையாக ரசிகர்கள் சளைக்காமல் விரும்புவது சஸ்பென்ஸ், த்ரில், மர்மங்களைக் கொண்ட குற்றத் திரைப்படங்கள். தமிழில், திகம்பர சாமியார், அந்தநாள், புதிய பறவை, அதே கண்கள் போன்ற பல படங்கள் கலைத் தன்மையோடு ரசிகர்களைப் புதுவித அனுபவத்தில் ஆழ்த்தின. அதுபோன்ற படங்கள் இன்றும் வேகத்தையும் விறுவிறுப்பையும் இழக்கவில்லை.
இப்போதும் பல துப்பறியும் படங்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருக்கும் ‘த தின் மேன் சீரிஸ் 1934 – 1947’ (THE THIN MAN SERIES) பற்றி முதலாவதாகப் பார்க்கலாம். வில்லியம் பாவெல் (William Powell) மற்றும் மிர்னா லாய் (Myrna Loy) இருவரும் தம்பதியராக நடித்த திரைப்பட வரிசை இந்தப் படங்கள். இதில், இருவரின் கெமிஸ்ட்ரியும் அற்புதமாக இருக்கும்.
இவர்கள் உண்மையான தம்பதியாக இருப்பார்களோ என அப்போதே சந்தேகித்தார்கள். காமெடி, ரொமான்ஸ், மர்மம்
மூன்றையும் ஒரே நேரத்தில் காட்டிய கிளாசிக் ஹாலிவுட் ஜோடி இவர்கள்தான். 14 படங்களில் சேர்ந்து நடித்தாலும் இந்த ‘தின் மேன்’ வரிசைப் படங்களுக்கு (6 படங்கள்) தனி இடம் உண்டு. இப்போது வரை ஹாலிவுட்டில் ‘கோல்டன் ஏஜ் ஆஃப் ஹாலிவுட் கபுள்” என்று அழைக்கப்படுகிறது, இந்த ஜோடி.
நிக் சார்லஸாக – கதாநாயகன் வில்லியம் பாவெல்: ஓய்வு பெற்ற டிடெக்டிவ். கொஞ்சம் ஒல்லியான, வளர்த்தியான உடல்வாகு. வசன உச்சரிப்பு துல்லியம். சீரியஸ் மற்றும் காமெடி இரண்டிலுமே பின்னி எடுப்பார். இந்த சீரிஸ் முழுவதுமே சீரியஸான இடத்தில் அவர் தரும் சிரிப்பு ரியாக்ஷன்களும், டைமிங் ஜோக்குகளும் ரசிக்க வைக்கும்.
நிக்கின் மனைவி நோரா சார்லஸாக – நாயகி மிர்னா லாய்: திருத்தமான சுறுசுறுப்பான அழகி. தாத்தா காலத்துக் கனவுக் கன்னி டி.ஆர்.ராஜகுமாரியின் மென்மை வெர்ஷன். இந்தப் படங்கள் முழுவதும் இவர் கண்ணைச் சுருக்கி, மூக்கைச் சுளித்துச் செய்யும் சின்னச் சின்ன ‘ரியாக் ஷன்’கள் நம்மை ரசிக்க வைக்கும்.
அஸ்டாவாக ஸ்கிப்பி என்ற நாய்: அஸ்டா என்ற நாயும் துணைக் கதாபாத்திரமாக இவர்களின் விசாரணைக்கு அவ்வப்போது உதவி செய்யும். சடைமுடி உள்ள சேட்டை நாய். நிக் என்ன சொல்கிறாரோ அதற்கு நேர் எதிராகத்தான் பண்ணும். பயந்தாங்குளி நாய். அவ்வப்போது அது அடிக்கும் பல்டிகளும், அலப்பறைகளும் தனி ரகம். முக்கியமான கட்டத்தில் எதையாவது தோண்டி எடுத்து, விசாரணைக்கு உதவும். அஸ்டாவுக்கும் ஜோடி உண்டு. அதுவும் ஒரு சுவாரஸ்ய கதை.
தேடி வரும் குற்றங்கள்: இந்த 3 கதாபாத்திரங்கள்தான் 6 கதைகளிலுமே வருகின்றன. நிக் சார்லஸ் டிடெக்டிவ் அல்ல. ஓய்வு பெற்றவர். நிக் ஓய்வெடுக்கச் செல்லுமிடங்களில் எல்லாம் குற்றங்கள் அவரைத் தேடி வரும். நிக், நோராவின் ரொமான்ஸ் மற்றும் குறும்புத்தனம், அஸ்டாவின் சேட்டைகள், ஒவ்வொரு கதைக்கும் குடும்பம், விளையாட்டு, இசை, சொந்த ஊர் என்று புதுப் பின்னணி, அனைத்து குற்றவாளிகளும் ஒரே இடத்துக்கு வரவழைக்கப்படும் கிளைமாக்ஸ் என்பவை இப்படங்களின் பொதுத்தன்மை. துப்
பறியும் கதைகள் என்பதற்காக இவை சீரியஸான கதைகள் அல்ல.
மெலிதான நகைச்சுவையுடன் நகர்ந்து செல்லும். நிக் சார்லஸின் சின்னச் சின்ன ஐடியாக்கள் நம்மை வியக்க வைக்கும். சஸ்பென்ஸ் கதைகளின் பொதுவிதியான, ‘யார் இதைச் செய்திருப்பார்கள்?’ என்பது இறுதிக் காட்சிவரை நம்மைப் பரபரப்புடன் வைத்திருக்கும்.
இந்த சீரிஸின் முதல் மூன்று கதைகளின் கதாசிரியர் டேஷியல் ஹேமெட். திரைக்கதை ஆசிரியர்களான ஆல்பர்ட் ஹேக்கட்/பிரான்சஸ் பிரான்ஸ் குட்ரிச்சும் தம்பதியர்தான். எம்.ஜி.எம் நிறுவனத்தின் கதாசிரியர்களான இவர்களின் கெமிஸ்ட்ரிதான், நிக்- நோரா சார்லஸிடம் இயல்பாக வெளிப்பட காரணமாக அமைந்தது. முதல் 4 கதைகளை டபிள்யூ எஸ் வான் டைக் இயக்கினார்.
(செவ்வாய் தோறும் படம் பார்ப்போம்)
– ராம்குமார் சுப்பாராமன், ramkumaraundipatty@gmail.com