கடந்த 25-ம் தேதி வெள்ளித்திரையில் பெரிய எதிர்பார்ப்புகள் எதுவுமின்றி வெளியானது கன்னட மொழி படமான ‘Su From So’. இப்போது அதன் கதை மூலம் பாக்ஸ் ஆபிஸில் வசூலை அள்ளி வருகிறது. கன்னட சினிமா உலகை கடந்து பான் இந்தியா அளவில் இந்தப் படம் குறித்த ‘டாக்’ இப்போது பாசிட்டிவாக உள்ளது.
கடந்த 18-ம் தேதி வெளியான இந்தி மொழி படமான ‘சயாரா’ தரமான வசூலை ஈட்டி வருகிறது. மறுபக்கம் தென்னிந்திய சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான பவன் கல்யாணின் ‘ஹர ஹர வீர மல்லு’ படம் கடந்த வாரம் வெளியானது. அதோடு இணைந்து சென்ற வாரம் ரிலீஸ் ஆனது Su From So படம்.
அறிமுக இயக்குநர் ஜே.பி.துமிநாட், எழுதி, இயக்கி, நடித்துள்ள படம் இது. ஹாரர் காமெடி ஜானரில் இந்தப் படம் எழுதப்பட்டுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்தப் படத்துக்கான புரோமஷனும் பெரிய அளவில் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், படம் வெளியானதும் அதன் கதை பார்வையாளர்களை ஈர்த்து விட்டது.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 26) அன்று ஒரே நாளில் ‘புக் மை ஷோ’ தளத்தில் மட்டும் சுமார் 1.77 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை அன்று 550 காட்சிகள் அரங்கம் நிறைந்த ஹவுஸ்புல் காட்சிகளாக இருந்தது. வார நாட்களான திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை அன்றும் இந்தப் படத்தின் வசூல் டீசென்டாக இருந்துள்ளது.
இந்தப் படத்தை கன்னட சினிமாவின் முன்னணி நடிகர், இயக்குநராக அறியப்படும் ராஜ் பி ஷெட்டி, தயாரிப்பாளர்களில் ஒருவராக உள்ளார். இந்தப் படத்தில் அவர் நடித்தும் உள்ளார். “கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ‘சு ஃப்ரம் ஸோ’ அறியப்படாத படமாக இருந்தது. இன்று, நீங்கள் அதை இந்த ஆண்டின் உற்சாகமான படங்களில் ஒன்றாக மாற்றி உள்ளீர்கள். உங்களது வார்த்தைகள்தான் இந்தப் படத்துக்கு புரோமஷன்” என ராஜ் பி ஷெட்டி கூறியுள்ளார். >>ட்ரெய்லர் வீடியோ