தெலுங்கு சினிமாத் துறையின் முன்னணி மாஸ் ஹீரோக்களில் ஒருவரும், ஆந்திராவின் துணை முதல்வருமான பவன் கல்யாணின் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘ஓஜி’. கடந்த 4 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் ஒருவழியாக மிகப்பெரிய ஓபனிங் உடன் வெளியாகியுள்ளது. பவன் கல்யாணின் முந்தைய படமான ‘ஹரிஹர வீரமல்லு’ மிகப் பெரிய தோல்வியை தழுவிய சில நாட்களிலேயே வெளியாகியுள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
1970களில் ஜப்பானின் டோக்யோ நகரத்தில் இயங்கி வரும் ஒரு ரகசிய குழுவில் சாமுராய் ஆக பயிற்சி பெற்ற ஓஜாஸ் கம்பீரா என்கிற ஓஜி (பவன் கல்யாண்) அங்கு நடக்கும் மிகப் பெரிய படுகொலை சம்பவத்திலிருந்து தனி ஆளாக ஒரு கப்பலில் தப்பித்து இந்தியா வருகிறார். கப்பலில் அவருக்கு அறிமுகம் ஆகும் பம்பாயின் மிகப் பெரிய புள்ளியான சத்யா (பிரகாஷ் ராஜ்) உடன் சேர்ந்து கொள்கிறார்.
இளைஞனாக இருக்கும் கம்பீராவை பல ஆண்டுகள் தன் மகனைப் போல பார்த்துக் கொள்வதோடு, தனக்கு எதிரானவர்களை அழித்தொழிக்கவும் பயன்படுத்துகிறார் சத்யா. பின்னர் ஒருகட்டத்தில் பிரகாஷ்ராஜிடம் இருந்து விலகிச் செல்லும் ஓஜி தனக்கென ஒரு குடும்பத்தை அமைத்து மனைவி கண்மணி (பிரியங்கா மோகன்) உடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
சத்யாவுக்கு சொந்தமான துறைமுகத்துக்கு வரும் ஒரு கண்டெய்னரால் அவரது குடும்பத்துக்கு மிகப் பெரிய பிரச்சினை ஒன்று வருகிறது. இது நாயகனின் குடும்பத்திலும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் வீறுகொண்டு எழும் ஓஜி, அதன் பிறகு என்ன செய்தார் என்பதே படத்தின் திரைக்கதை.
தெலுங்கில் தனக்கென ஒரு மிகப் பெரிய ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் பவன் கல்யாண். அவருக்காக உயிரையே கொடுக்கும் அளவுக்கு வெறித்தனமான அந்த ரசிகர்களுக்காவே ஒரு ‘ஃபேன் சர்வீஸ்’ படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் சுஜீத். இந்த ஃபேன் சர்வீஸ் காட்சிகளில்தான் ஒட்டுமொத்த படமும் பயணம் செய்கிறது என்பதே உண்மை.
அந்த அளவுக்கு பவன் கல்யாண் வரும் காட்சிகளில் ஒவ்வொரு ஃப்ரேமையும் பார்த்து பார்த்து இழைத்துள்ளார். அதிலும் ஆக்ஷன் காட்சிகளில் தியேட்டரே அலறும் அளவுக்கு அதகளப்படுத்தியிருக்கிறார். பீட்டர் ஹெயின் உள்ளிட்ட ஸ்டன்ட் இயக்குநர்களுடன் ஒளிப்பதிவாளர்கள் ரவி கே சந்திரன், மனோஜ் பரமஹம்சா ஆகியோரும் போட்டி போட்டு உழைத்துள்ளனர். ஆக்ஷன் காட்சிகளை தமனின் பின்னணி இன்னும் ஒருபடி இசை தூக்கி நிறுத்துகிறது.
படத்தின் தொடக்கத்தில் வரும் ஜப்பானிய அனிமே பாணியிலான விவரிப்பு, அதனைத் தொடர்ந்து வரும் 1993 பம்பாய் காட்சிகள், ஹீரோ அறிமுகம் என அடுத்தடுத்து ரசிகர்களை இருக்கையில் அமர விடாத அளவுக்கு எழுதப்பட்ட விதம் சிறப்பு. குறிப்பாக இடைவேளை காட்சி அமைக்கப்பட்ட விதம்.
ஒப்பீட்டளவில் இந்தப் படத்தில் பவன் கல்யாணுக்கான காட்சிகள் சற்று குறைவுதான் என்று சொல்லவேண்டும். ஆனால் தனது ஸ்க்ரீன் ப்ரெசன்ஸால் கவர்கிறார். அதிகம் பேசாமல் அடக்கி வாசிக்கும் அவர், ஆக்ஷன் காட்சிகளில் வெறியாட்டம் ஆடுகிறார். ‘ஹரிஹர வீரமல்லு’வில் பார்த்ததை விட இதில் ஃப்ரெஷ் ஆக இருக்கிறார்.
பிரியங்கா மோகன் வரும் காட்சிகளை ஒரு உள்ளங்கையில் எழுதிவிடலாம். இடைவேளைக்கு முந்தைய காட்சியை தவிர படத்தில் அவரால் பெரிய பயன் எதுவும் இல்லை. பிரகாஷ் ராஜ், அர்ஜுன் தாஸ், ஷ்ரேயா ரெட்டி ஆகியோர் தங்கள் பங்கை செவ்வனே செய்துள்ளனர். வில்லனாக வரும் இம்ரான் ஹாஸ்மிக்கு முக்கியத்துவம் இல்லை. அவருடைய தெலுங்கு வாயசைப்பும் ஒட்டவில்லை.
முன்பே குறிப்பிட்டதைப் போல படத்தின் தரமான ஆக்ஷன் காட்சிகள், ரசிகர்களுக்கான தருணங்கள் ஆகியவை நன்றாக வந்திருப்பதை மறுக்க முடியாதுதான். ஆனால் அவற்றை தாண்டி இப்படத்தின் அழுத்தமாக என்ன இருக்கிறது என்பதுதான் கேள்வி. முதல் பாதி முழுக்க ஹீரோவுக்கான பில்டப்களும், வில்லன்களே ஹீரோவை புகழும் வசனங்கள், ஹீரோவின் பின்னணி என ஓரளவு சுவாரஸ்யமாக சென்று விடும் திரைக்கதை, இடைவேளைக்குப் பிறகு இந்த ஃபேன் சர்வீஸ் தருணங்கள் ஓய்ந்த பிறகு தேமேவன தடுமாறத் தொடங்கிவிடுகிறது.
தோல்வியே இல்லாத ஹீரோ, பலவீனமான வில்லன் என எழுதப்பட்ட திரைக்கதையால் இரண்டாம் பாதியில் சுவாரஸ்யம் என்பது கொஞ்சம் அல்ல, நிறையவே குறைவு.
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யை நினைவுப்படுத்தும் ஆரம்ப காட்சிகளுடன் தொடங்கினாலும், ரஜினியின் ‘பாட்ஷா’ போன்ற ஒரு பக்கா மாஸ் மசாலா என்டர்டெயினருக்கான வாய்ப்பை இயக்குநர் வீணடித்துள்ளார் என்றே சொல்லவேண்டும். என்னதான் ரசிகர்களுக்கான அம்சங்களை நிரப்பினாலும், பொதுவான ஆடியன்ஸ் மத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக அழுத்தமான திரைக்கதை இருக்க வேண்டும். அது இந்த படத்தில் மிஸ்ஸிங் என்றுதான் சொல்லவேண்டும்.
இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்கள், அதிரடியான ஆக்ஷன் காட்சிகள், பவன் கல்யாணின் ஸ்லோ மோஷன் காட்சிகளை நீக்கி விட்டால் இப்படத்தில் என்ன இருக்கிறது என்பது இயக்குநருக்கே வெளிச்சம். இயக்குநரின் முந்தைய படமான ‘சாஹோ’ அளவுக்கு மோசமில்லை. எனினும் ‘சாஹோ’, ‘ஜானி’ உள்ளிட்ட குறியீடுகள் படத்துக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை.
பவன் கல்யாணை விதவிதமாக திரையில் காட்ட மெனக்கெட்ட இயக்குநர், கொஞ்சம் திரைக்கதையிலும் கவனம் செலுத்தி இருந்தால் ஒரு தரமான மாஸ் மசாலா படமாக வந்திருக்கும் இந்த ‘ஓஜி’.