கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘நோபடி’. பாப் ஓடன்கிர்க் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தை இல்யா நைஷல்லர் இயக்கி இருந்தார். யுனிவர்ஸல் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. 2021ஆம் ஆண்டுக்கு பிறகு வெளியான பல்வேறு ஆக்ஷன், த்ரில்லர் படங்களில் இப்படத்தின் தாக்கம் இருப்பதை பார்க்க முடியும். தற்போது இப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? – ஆக்ஷன், த்ரில்லர், டார்க் காமெடி ரசிகர்கள் விரும்பும் அத்தனை அம்சமும் இப்படத்தில் இருக்கும் என்பதை ட்ரெய்லரின் மூலம் அறியமுடிகிறது. ‘பிரேக்கிங் பேட்’, ‘பெட்டர் கால் சால்’ ரசிகர்களுக்கு படத்தின் ஹீரோவை பற்றி சொல்லி தெரியவேண்டியதில்லை.
குடும்பத்துக்காக நேரம் ஒதுக்கி சுற்றுலா செல்லும் ஹீரோவுக்கு அங்கு வில்லன் ஆட்களால் பிரச்சினை ஏற்படுவதாக ட்ரெய்லரில் காட்டப்படுகிறது. முதல் பாகத்தில் இருந்ததை ஒரு படி மேலாக ஆக்ஷன், வன்முறை, மாஸ் காட்சிகள் இதில் தாராளமாக இடம் பெற்றிருக்கும் என்று தெரிகிறது. சண்டைக் காட்சிகள் கூஸ்பம்ப்ஸ் தருணங்களுக்கு உறுதியளிக்கின்றன. படம் வரும் ஆகஸ்ட் 15 திரையரங்குகளில் வெளியாகிறது. ‘நோபடி 2’ ட்ரெய்லர் வீடியோ: