மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டி, மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் மறுமலர்ச்சி, தளபதி, ஆனந்தம், கிளிப்பேச்சு கேட்கவா உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
அடுத்து அவர், மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் மோகன்லாலுடன் இணைந்து நடிக்கிறார். இதில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். கடந்த 7 மாதத்துக்கு முன், இதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது மம்மூட்டிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்குப் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இதனால் படப்பிடிப்பில் இருந்து அவர் விலகி இருப்பதாகவும் செய்திகள் பரவின.
இந்நிலையில் அவர் குணமடைந்துவிட்டதாகவும் படங்களில் மீண்டும் நடிக்கத் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியானது. இதையடுத்து ரசிகர்கள், திரைத்துறையினர், அரசியல்வாதிகள் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் மோகன்லால், மம்மூட்டிக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை மட்டும் பதிவு செய்துள்ளார். “டைகரை மீண்டும் வரவேற்கிறோம்” என்று மஞ்சு வாரியரும், “இந்தச் செய்தியைக் கேட்க நான் பிரார்த்தனை செய்தேன்” என்று பிரபல இயக்குநர் சிபி மலயிலும் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு என்ன பாதிப்பு என்பதை, மம்மூட்டி தரப்பில் தெரிவிக்கவில்லை.