சென்னையில் வசிக்கும் வாசுதேவனின் (சரத்குமார்) குடும்பம் அடிக்கடி வீடு மாறுகிறது. சொந்த வீடு வாங்கினால் எல்லாம் சரியாகிவிடும் என்பதற்காக சிறுகச் சிறுக பணம் சேர்க்கிறார் வாசுதேவன். மனைவி சாந்தி (தேவயானி) தன் பங்குக்கு கை கொடுக்கிறார். மகன் பிரபு (சித்தார்த்) பெரியவனாகி குடும்பத்தைக் காப்பாற்றுவான் என்கிற கனவில், பெரிய பள்ளி, கல்லூரியில் படிக்க வைக்கிறார்கள். அண்ணனுக்காக அரசுப் பள்ளியில் படிக்கிறார் தங்கை ஆர்த்தி (மீதா ரகுநாத்). ஒருவருக்கொருவர் அனுசரணையாக வாழும் அந்தக் குடும்பத்தின் ஒரே கனவு சொந்த வீடு வாங்குவது. அது நிறைவேறியதா, இல்லையா என்பது கதை.
நடுத்தரக் குடும்பங்களுக்குச் சொந்த வீடு, பெரும் கனவு என்பதால், அனைவருடனும் எளிதாக ’கனெக்ட்’ ஆகிற கதைக் களம் இது. அதை முடிந்தவரை சுவாரஸியமாகத் திரைக்கதையாக்கி இருக்கிறார், இயக்குநர் கணேஷ். வெறுமனே வீடு வாங்கும் கனவை மட்டும் சொல்லாமல், அதற்காக ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் எவ்வளவு போராடுகிறார்கள் என்பதைப் பல இடங்களில் உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருப்பது பலம்.
கதையில் வீட்டை மட்டும் மையப்படுத்தாமல் தன் கனவை மகன் மீது திணிக்கும் நடுத்தரக் குடும்பத்தின் தந்தை – மகனின் காட்சிகள் கிளைக் கதையாக நகர்வதும் ரசிக்க வைக்கின்றன.
தந்தை வாசுதேவன் வீடு வாங்க சிரமப்படும் காட்சிகளுடன் ஒப்பிடும்போது மகன் வீடு வாங்க முயற்சிக்கும் காட்சிகள் தொய்வடைகின்றன. முதல் தலைமுறையில் பட்ட ஆசை, இரண்டாம் தலைமுறையிலும் நீடிப்பதை இன்னும் சுவாரஸ்யத்துடன் சொல்லி இருக்கலாம். சொந்த வீடு இல்லை என்றால் மரியாதைக் குறைவு எனும் அளவுக்கு வீட்டுக் கனவைத் தூக்கிப் பிடித்திருப்பது சற்று அதீதம். சித்தார்த் படித்து, வேலை பார்க்கும் துறையை விட்டுவிட்டு வேறு துறைக்கு மாறி சாதிப்பது வழக்கமான சினிமா சட்டகம். சட்டென கிளைமாக்ஸ் வருவதும், கனவு நனவாவதையும் இன்னும் சில காட்சிகளில் சொல்லியிருக்கலாம். இதுபோன்ற சில தொய்வுகள் இருந்தாலும் நாடகத்தன்மையுள்ள கதையைப் போரடிக்காமல் நகர்த்தி
யிருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.
நடுத்தரக் குடும்பத் தலைவரைக் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார், சரத்குமார். வீட்டுக் கனவை அடைய முடியாமல் தவிப்பது, பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்துக் கலங்குவது என நடிப்பில் மிளிர்ந்திருக்கிறார். முதல் பாகத்தில் சரத்குமாருக்கு முக்கியத்துவம் என்றால் இரண்டாம் பாகத்தில் சித்தார்த்துக்கு.
பள்ளி, கல்லூரி, வேலை, குடும்பத் தலைவர் என்று வெவ்வேறு காலகட்டத்தில் நடக்கும் திரைக்கதைக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார், சித்தார்த். தேவயானி கதாபாத்திரத்துக்கு இன்னும் முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். மிதா ரகுநாத், சைத்ரா, தலைவாசல் விஜய், சுப்பு பஞ்சு, விவேக் பிரசன்னா ஆகியோர் தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். சிறிது நேரம் வந்தாலும் யோகிபாபு சிரிக்க வைக்கிறார்.
கதைக்குத் தேவையான உணர்வுப்பூர்வமான இசையை வழங்கியிருக்கிறார், அம்ரித் ராம்நாத். தினேஷ் பி. கிருஷ்ணன், ஜித்தின் தனிஸ்லாஸ் ஆகியோரின் ஒளிப்பதிவு பக்கபலம். கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு, கிளைமாக்ஸில் கவனம் செலுத்தியிருக்கலாம். 3பிஹெச்கே- நடுத்தர வர்க்கத்தின் வாழ்வியல் கனவு.