ராகவா லாரன்ஸ், அவருடைய சகோதரர் எல்வின் இணைந்து நடித்துள்ள படம், புல்லட்.
இதில் வைஷாலி ராஜ், சுனில், அரவிந்த் ஆகாஷ், காளி வெங்கட், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்டோர் நடிக்கின்றனர். சாம் சி.எஸ். இசையமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். ‘டைரி’ படத்தை இயக்கிய இன்னாசி பாண்டியன் இயக்குகிறார். ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிக்கிறார். இதன் தமிழ் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.
1980 மற்றும் 90-களில் பிரபல நடிகையாக விளங்கிய டிஸ்கோ சாந்தி இந்தப் படத்தின் மூலம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார்.
கடந்த 1997-ம் ஆண்டு முதல் படங்களில் நடிக்காத அவர், இதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் பற்றிப் பேசிய இன்னாசி பாண்டியன், “இது முழு நீள அமானுஷ்ய ஆக் ஷன் த்ரில்லர் படம். இந்த கதையை தான் முதல் படமாக இயக்க இருந்தேன். சில காரணங்களால் அது இயலவில்லை. இதை எனது 2-வது படமாக இயக்கி வருகிறேன்” என்று கூறினார்.