‘ஹிட் 3’ படம் சூப்பர் ஹிட் எனக் கேட்பதில் மகிழ்ச்சி அடைவதாக நானி தெரிவித்துள்ளார்.
சைலேஷ் கோலனு இயக்கத்தில் நானி தயாரித்து, நடித்த படம் ‘ஹிட் 3’. உலகமெங்கும் வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2 நாட்களில் 62 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதை முன்னிட்டு படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.
இச்சந்திப்பில் நானி, “திரைத்துறையினர் மற்றும் ரசிகர்களிடம் இருந்து கிடைத்த வரவேற்பு மிகவும் அற்புதமாக இருக்கிறது. ‘ஹிட் 3’ படம் சூப்பர் ஹிட் என்று கேட்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இது வெறும் ஆரம்பம் தான். இந்தப் பயணம் எவ்வளவு தூரம் செல்லும் என்று தெரியவில்லை. எனவே, இன்னும் பெரிய அறிக்கைகள் வெளியிடுவதை தவிர்க்கிறேன். ஏனென்றால் இன்னும் 4 அல்லது 5 முறையாவது இந்த வெற்றியைக் கொண்டாட வேண்டும்.
இந்த வெற்றி இன்னும் பொறுப்பை அதிகமாக்குகிறது. சைலேஷை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். இப்படத்தில் அனைவரும் பார்த்தது அவரது உண்மையான தொலைநோக்குப் பார்வையின் ஒரு டீஸர் மட்டுமே. மேலும், இப்படத்துக்கு ஆதரவளித்த தில் ராஜு, டிக்கெட் கொள்கைக்கு ஆதரவளித்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றி எங்கள் படத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தெலுங்கு சினிமாவுக்கும், வரவிருக்கும் இதர பட வெளியீட்டுக்கும் இந்த வெற்றி அலை தொடரும் என்று நம்புகிறேன்.” என்று பேசினார் நானி. தற்போது அமெரிக்காவில் ‘ஹிட் 3’ படத்தினை விளம்பரப்படுத்தி வருகிறார் நானி.