பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் கற்றுக்கொண்டது குறித்து அர்ச்சனா வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அர்ச்சனா. தற்போது திரையுலகிலும் நடிகையாக அறிமுகமாக இருக்கிறார். இது தொடர்பாக அர்ச்சனா கூறும்போது, “பிக்பாஸ் நிகழ்ச்சி எனக்கு அடையாளம் மட்டும் கொடுக்கவில்லை. எனது முகமூடி இல்லாத அசல் முகத்தையும் பார்வையாளர்களுக்குக் கொண்டு சேர்த்தது. இந்த விஷயம் பிக்பாஸ் நிகழ்ச்சியை இன்னும் எனக்கு நெருக்கமானதாக மாற்றியுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் இருந்து ஒரு விஷயம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அது அமைதி. நான் அதிகம் பேசக்கூடிய நபர். ஆனால், இப்போது எங்கே பேச வேண்டும் எங்கு அமைதியாக இருக்க வேண்டும் என்பதைக் கற்றுக் கொண்டேன். இது என்னுடைய புதிய வெர்ஷனை எனக்கே அறிமுகப்படுத்தியது.
ஐடி-யில் சேர்ந்திருக்கலாம் அல்லது யுபிஎஸ்சி-க்கு தயாராகி இருக்கலாம். ஏனெனில், என் அப்பா என்னை எப்போதும் ஒரு ஐஏஎஸ் அதிகாரியாக பார்க்க வேண்டும் என்று கனவு கண்டார். ஆனால், இப்போது வழக்கமான கதாபாத்திரங்கள் ஏற்று நடிப்பதில் எனக்கு விருப்பமில்லை. வலுவான, பல அடுக்குகள் கொண்ட, எமோஷனலான பெண் கதாபாத்திரங்களைத் திரையில் கொண்டு வரவே விருப்பம்.
கதை நன்றாக இருந்தால் சினிமா, ஓடிடி இரண்டிலும் நடிப்பேன். மாஸாக நடிப்பதை விட அர்த்தமுள்ள அதேசமயம் பார்வையாளர்களுடன் ஒன்றக் கூடிய கதாபாத்திரங்களில் நடிக்கவே விருப்பம். சீனியர் நடிகர்கள் ஷபானா ஆஸ்மி, ஸ்மிதா பாட்டீல், அர்ச்சனா, ஷோபனா மற்றும் நந்திதா தாஸ் முதலானவர்கள் பிடிக்கும். கதாநாயகிகளாக அவர்கள் முத்திரை பதித்துள்ளனர். அதுபோல என் பணியிலும் முத்திரை பதிக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார் அர்ச்சனா.