எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி என டாப் ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் ஒரு பக்கம் கலக்கிக் கொண்டிருந்த காலத்தில், தனக்கென்று தனியிடம் பிடித்தவர், ‘தமிழக ஜேம்ஸ்பாண்ட்’ ஜெய்சங்கர். ஸ்பை ஆக்ஷன், ஆக்ஷன் த்ரில்லர் கதைகளில் அதிகம் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த அவர் நடித்த படங்களில் ஒன்று, ‘வைரம்’.
இது அவரின் 104-வது படம். இந்தியில், அசோக் குமார், சாய்ரா பானு நடித்து வெற்றி பெற்ற ‘விக்டோரியா நம்பர் 203’ என்ற படத்தின் ரீமேக். இந்தியில் சாய்ரா பானு நடித்த வேடத்தில் ஜெயலலிதா நடித்தார். ஸ்ரீகாந்த், எம்.ஆர்.ஆர்.வாசு, அசோகன், ஆர்.எஸ்.மனோகர், எஸ்.வி.ராமதாஸ், தேங்காய் சீனிவாசன், எஸ்.வி.சஹஸ்ரநாமம், சச்சு என பலர் நடித்தனர்.
ரூ. 3 கோடி மதிப்புள்ள வைரத்தை கடத்த நினைக்கும் ஆர்.எஸ்.மனோகர் அதற்காக ஆளை அனுப்புகிறார். அவரோ அதை அபகரித்துக்கொள்ள நினைக்கிறார். அவரைக் கொன்று விட்டு வைரத்தை எடுத்துவர வேறொருவரை அனுப்புகிறார், மனோகர். கடத்தப்பட்ட வைரத்தின் பின்னணியில் சில மர்மங்களும் குழப்பங்களும் இருக்கின்றன. அதைத் தொடர்ந்து நடக்கும் பரபரப்பும் விறுவிறுப்பும்தான் படம்.
விஜயா- சூரி கம்பைன்ஸ் தயாரித்த இந்தப் படத்துக்கு டி.என்.பாலு திரைக்கதை, வசனம் எழுதினார். பாடல்களைக் கண்ணதாசன் எழுத, டி.ஆர்.பாப்பா இசை அமைத்தார். அமிர்தம் ஒளிப்பதிவு செய்தார். டி.ஆர்.ராமண்ணா இயக்கிய இந்தப் படத்தில் கிளாமர் அதிகம் இருந்ததாக அப்போது விமர்சிக்கப்பட்டது.
‘இரவு முழுவதும் விருந்து வைக்கின்றேன்’, ‘பார்த்தேன் ஒரு அழகி’, ‘தானா கிடைச்சதய்யா’ ஆகிய பாடல்கள் இடம்பெற்றன. எஸ்.பி.பியுடன் ஜெயலலிதாவும் பாடிய ‘இரு மாங்கனி போல் இதழோரம்’ என்ற பாடல் வரவேற்பைப் பெற்றது.
தனது தந்தை, சிறைக்குச் செல்ல ஸ்ரீகாந்த்-தான் காரணம் என்பதை அறியும் ஜெயலலிதா, அவரை சிக்க வைப்பதற்காக, குறைந்த உடை அணிந்தபடி பாட்டுப் பாடி மயக்க முயல்வார். ‘இரவு முழுவதும்’ என்று தொடங்கும் அந்த பாடலில் அவர் அணிந்திருந்த ஆடை அப்போது விமர்சிக்கப்பட்டது. சில காட்சிகளில் குதிரை வண்டி இயக்குபவராக ஆண் வேடத்திலும் வருவார்.
நடிகை ஷோபா, இதில் ஜெயலலிதாவின் தங்கையாக நடித்திருப்பார். காமெடி கேரக்டரில் அசோகன் நடிப்பு இதில் ரசிக்கப்பட்டது. 1974-ம் ஆண்டு இதே தேதியில் (மே 24) வெளியான இந்தப் படம் வெற்றி பெற்றது.