வேற்று மொழியில் படம் பண்ணுவது மாற்றுத் திறனாளியைப் போல உணர வைப்பதாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான் நடிப்பில் வெளியான படம் ‘சிக்கந்தர்’. இப்படம் பெரும் தோல்வி படமாக அமைந்தது. இப்படக்குழுவினரை பலரும் கடுமையாக விமர்சித்திருந்தார்கள். இதனிடையே தற்போது வேறு மொழியில் படம் பண்ணுவது மாற்றுத்திறனாளிக்கு சமம் என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இது தொடர்பாக ஏ.ஆர்.முருகதாஸ், “தாய்மொழியில் படம் பண்ணுவது பெரிய பலம். ஏனென்றால் தினமும் என்ன நடக்கிறது என்பது தெரியும். அதைக் காட்சிகளில் வைக்கும் போது மக்களிடையே ஓர் இணைப்பு இருக்கும். வேறு மொழியில் படம் பண்ணும் போது அன்றைய தினத்தில் என்ன நடக்கிறது, ரசிகர்கள் என்ன ரசிக்கிறார்கள் என்பது தெரியாது. வெறும் கதை, திரைக்கதையை நம்பி மட்டுமே படம் பண்ண வேண்டும். அப்படி பார்க்கும் போது தமிழ் தான் முழு பலம். தெலுங்கும் ஓகே தான். ஏனென்றால் தெலுங்கு நமது மொழி மாதிரி கிட்டதட்ட இருக்கும் என்பதால் பிடித்துவிடலாம்.
இந்தி எல்லாம் ஒன்றுமே தெரியாது. ஏனென்றால், தமிழில் எழுதுவோம். அதை ஆங்கிலத்தில் மாற்றி பின்பு இந்தியில் மாற்றி திரையில் வரும். அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை யூகித்துக் கொள்ளலாமே தவிர, சரியாக என்ன பேசுகிறார்கள் என்பதை உணர முடியாது. மொழி தெரியாத ஊரில் படம் பண்ணும் போது, நாம் மாற்றுத் திறனாளி போல் தான் உணர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மதராஸி’ வெளியாகவுள்ளது. செப்டம்பர் 5-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் மும்முரமாக தொடங்கப்பட்டுள்ளன.