இந்த ஆண்டு வெளிநாடுகளில் அதிக வசூல் செய்த இந்திப் படம் என்ற மாபெரும் சாதனையை ‘சையாரா’ பெற்றுள்ளது.
இந்தி திரைப்பட இயக்குநர் மோஹித் சூரி இயக்கியுள்ள காதல் திரைப்படம், ‘சையாரா’. யாஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இதில் அஹான் பாண்டே ஹீரோவாக அறிமுகமாகியுள்ளார். இவர் பிரபல இந்தி நடிகர் சங்கி பாண்டேவின் சகோதரர் மகன். அனீத் பட்டா கதாநாயகியாக நடித்துள்ளார்.
ஜூலை 18-ம் தேதி வெளியான இப்படம் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மாபெரும் வசூல் சாதனையை நடத்தி வருகிறது. வெளிநாடுகளில் மட்டும் 15 மில்லியன் டாலர் வசூலை கடந்திருக்கிறது. மோகன்லால் நடிப்பில் வெளியான ‘எம்புரான்’ திரைப்படம் 16.95 மில்லியன் டாலர் வசூல் செய்து முதல் இடத்தில் இருக்கிறது. இதனை விரைவில் ‘சையாரா’ முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் மொத்த வசூலில் 300 கோடி ரூபாயை கடந்துவிட்டது ‘சையாரா’. உலகளவில் 500 கோடி ரூபாயை கடந்திருக்கிறது. முதலீடு செய்த பணத்தை விட, பன்மடங்கு லாபம் ஈட்டியுள்ளது யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம். விரைவில் ‘ஜாவா’ படத்தின் வசூலை முறியடித்து, இந்தாண்டின் அதிக வசூல் செய்த இந்திப் படம் என்ற மாபெரும் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே வேளையில், ஆகஸ்ட் 14-ம் தேதி ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதால் ‘சையாரா’ படத்தின் வசூல் குறையக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.