இயக்குநர் வெற்றி மாறன் ‘விடுதலை’, ‘விடுதலை 2’ படங்களை அடுத்து ‘வாடிவாசல்’ படத்தை இயக்குவதாக இருந்தது. இதை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருந்தார். சூர்யா ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமானார். அவருடன் இயக்குநர் அமீர் உள்ளிட்டோர் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்துக்கு டெஸ்ட் ஷூட்டும் நடத்தப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் தொடங்கப்படவில்லை.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கும் படத்தில் சிலம்பரசன் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இது ‘வடசென்னை’யின் 2 வது பாகமாக இருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் அதை மறுத்த இயக்குநர் வெற்றிமாறன், இது வட சென்னை யுனிவர்ஸ் கதை என்றும் ‘வட சென்னை’ படத்தின் 2-ம் பாகம் இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்தப் படத்தின் புரமோ அக்.4-ம் தேதி வெளியாவதாக இருந்தது. சென்சார் காரணங்களால் அது தாமதமானது.
இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு, முதல் தோற்ற போஸ்டரோடு வெளியாகி இருக்கிறது. படத்துக்கு ‘அரசன்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தனுஷுக்கு ‘அசுரனை’ கொடுத்த வெற்றி மாறன், சிம்புவை ‘அரசன்’ ஆக்கியிருக்கிறார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.