தமிழில் விஷாலின் ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ படத்தில் நடித்தவர் நடிகை தனுஸ்ரீ தத்தா. இவர் இந்தியில், ‘ஹார்ன் ஓகே
ப்ளீஸ்’, ‘ஆஷிக் பனாயா அப்னே’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன், இந்தி நடிகர் நானா படேகர் மீது கூறிய ‘மீ டூ’ புகார் பரபரப்பாகி இருந்தது. இதுதொடர்பாக இருவரும் மாறி மாறி வழக்குத் தொடுத்தனர். இந்நிலையில், தனுஸ்ரீ தத்தா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணீர் மல்க இரண்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “என் சொந்தவீட்டிலேயே நான் துன்புறுத்தப்படு கிறேன். அதை தாங்க முடியாமல் போலீஸாருக்கு போன் செய்தேன். அவர்கள் முறையான புகார் அளிக்கச் சொல்லி இருக்கிறார்கள். நான் அளிக்க இருக்கிறேன். கடந்த 4-5 வருடங்களாக நான் சித்தரவதையை அனுபவித்து வருவதால் அது என் உடல்நிலையை பாதித்துள்ளது. என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. என் வீட்டிலேயே எனக்கு நிம்மதி இல்லை. வீட்டில் வேலைக்குக் கூட ஆட்களை நியமிக்க முடியவில்லை.
அவர்கள் திருடுவது உள்ளிட்ட விஷயங்களைச் செய்தார்கள். மோசமான அனுபவங்களை எதிர் கொண்டேன். கடந்த 2020-ம் ஆண்டில் இருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் என் வீட்டுக்கு வெளியே மிக அதிகமான சத்தத்தைக் கேட்கிறேன். இது தொடர்பாகக் குடியிருப்பு நிர்வாகத்திடம் புகார் கொடுத்துச் சோர்வடைந்துவிட்டேன். தயவு செய்து யாராவது எனக்கு உதவுங்கள்” என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.