ரஜினியை வில்லனாக காட்ட நினைத்த கதை குறித்து பேட்டி ஒன்றில் விவரித்து இருக்கிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
ஆகஸ்ட் 14-ம் தேதி ரஜினி – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியாகவுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு முன்பாக ரஜினி வைத்து வேறொரு கதையை இயக்க இருந்தார் லோகேஷ் கனகராஜ். அது ஏன் நடக்கவில்லை என்பது குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார்.
அதில் லோகேஷ் கனகராஜ், “‘கூலி’ கதைக்கு முன்பு ரஜினிக்காக வேறொரு கதை வைத்திருந்தேன். அதுவொரு ஃபேன்டஸி படம். அந்தக் கதையில் ரஜினி தான் வில்லன், நாயகனாக யாரை நடிக்க வைக்கலாம் என்று பேசிக் கொண்டிருந்தோம். ரஜினி உட்பட யாருமே அந்தக் கதையை வேண்டாம் என்று கூறவில்லை. அதனை படப்பிடிப்பு தளத்துக்கு எடுத்து வரவே ஒன்றரை வருடம் வரை தேவைப்பட்டது. ஏனென்றால் நிறைய நடிகர்கள், கிராபிக்ஸ் காட்சிகள் என பல விஷயங்கள் அதில் அடங்கியிருந்தது.
ரஜினியின் தேதிகளையும் வீணாக்க விரும்பவில்லை. அதுமட்டுமன்றி எனக்கு சில தனிப்பட்ட பிரச்சினைகள் இருந்தன. ஆகவே, ஒரு நாள் ரஜினியை தொலைபேசியில் அழைத்து, இக்கதையை பண்ண இது சரியான நேரமில்லை. என்னிடம் வேறொரு கதை இருக்கிறது என்று கூறிய கதை தான் ‘கூலி’. ரஜினியை வில்லனாக காட்ட ஏற்ற கதை, இதற்கு முந்தைய கதை. அது அவருக்குமே ரொம்ப பிடித்த கதை. அவர் அந்தக் கதையை கேட்டு ரொம்பவே சந்தோஷப்பட்டார். ஏனோ சில காரணங்களால் அப்படம் கைகூடவில்லை” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூலி’ படத்தில் சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஆமிர்கான், ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் ரஜினியுடன் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14-தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளராக அனிருத் பணிபுரிந்துள்ளார்.