தமிழில் மிக பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று ‘பிக்பாஸ்’. கடந்த 2017 முதல் ஆண்டுதோறும் ஒளிபரப்பாகி வந்த இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். 7 சீசன்கள் வரை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் தனிப்பட்ட காரணங்களால் விலகவே, கடந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9-வது சீசன் தற்போது தொடங்கியுள்ளது. இந்த சீசனையும் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதற்காக கடந்த சில மாதங்களாகவே போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வந்தன. கடந்த 5ஆம் தேதி இதற்கான தொடக்க நிகழ்வில் அனைத்து போட்டியாளர்களையும் அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பி வைத்தார் விஜய் சேதுபதி. இந்த சீசனின் போட்டியாளர்கள் யார் யார்? அவர்களின் பின்புலம் என்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.
‘வாட்டர்மெலன்’ திவாகர்: சமூக வலைதளங்களில் அண்மைக் காலமாக பேசுபொருளாக இருந்த இவர், ‘கஜினி’ படத்தில் சூர்யா செய்த தர்பூசணி காட்சியை வைத்து ரீல் செய்து அதன் மூலம் வைரலானவர். ‘வாட்டர்மெலன் ஸ்டார்’ என்று தனக்குத் தானே அடைமொழி வைத்துக் கொண்ட இவர் நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலமே அதிகம் பிரபலமானார். ஒரு நேர்காணலில் தொகுப்பாளரிடம் பாதியில் கோபித்துக் கொண்டு சென்றவரை அதன் பிறகு பெரியளவில் பொதுவெளியில் பார்க்கமுடியவில்லை. தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஐக்கியமாகியிருக்கிறார்.
ஆரோரா சின்க்ளேர்: இவரும் சமூக வலைதள பிரபலம்தான். மாடலிங் துறையில் இருந்தாலும் சில வெப் தொடர்களில் நடித்துள்ளார். ஆனால் அவை பெரிய அளவில் கவனம் பெறவில்லை. தன் மீதான எதிர்மறை பிம்பத்தை மாற்ற பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பதாக சொல்கிறார்.
FJ: ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இசைக்குழுவில் ‘பீட்பாக்ஸ்’ கலைஞராக பணியாற்றிவர். ‘சுழல்’ வெப் தொடரில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சுந்தர் சி இயக்கிய ‘அரண்மனை 4’ திரைப்படத்திலும் தோன்றியுள்ளார். துள்ளல் நிறைந்த போட்டியாளராக பிக்பாஸ் வீட்டில் தற்போது நுழைந்திருக்கிறார்.
விஜே பார்வதி: பல்வேறு யூடியூப் சேனல்களில் தொகுப்பாளராக இவரை பலருக்கும் தெரிந்திருக்கக் கூடும். இந்த சீசனின் ஓரளவு அறிமுகமான வெகுசில முகங்களில் இவரும் ஒருவர். இதற்கு முன்பு இதே விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியிலும் ஒரு சில எபிசோட்கள் கோமாளியாக வந்திருக்கிறார். முற்போக்கு சிந்தனை கொண்ட, துடிப்பான பெண்ணாக தன்னை முன்னிறுத்தும் பார்வதி இந்த சீசனின் முக்கிய போட்டியாளராக பார்க்கப்படுகிறார்.
துஷார்: பார்ப்பதற்கு கொரிய நாட்டைச் சேர்ந்தவரைப் போல இருந்தாலும் தமிழகத்தின் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் துஷார். நடிகராக வேண்டும் என்ற லட்சியத்துடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கும் இவர், சிவகார்த்திகேயனை தனது இன்ஸ்பிரேஷனாக சொல்கிறார்.
கனி: இவரும் இந்த சீசனின் பிரபலமான போட்டியாளர்களில் ஒருவர். ‘குக் வித் கோமாளி’ இரண்டாவது சீசனின் வெற்றியாளர். இயக்குநர் அகத்தியனின் மூத்த மகள். இப்படி பல அடையாளங்களுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கும் கனி இந்த சீசனின் அதிகம் கவனிக்கப்படும் நபர்களில் ஒருவராக இருப்பார் என்று நம்பலாம்.
சபரி: விஜய் டிவியில் ஒளிப்பரப்பான சில சீரியல்களில் நடித்தவர். ’வேலைக்காரன்’ என்ற தொடரில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனக்கென ஒரு அடையாளம் தேடி இந்த நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக சொல்கிறார் சபரி.
பிரவீன் காந்தி: ‘ரட்சகன்’, ‘ஸ்டார்’, ஜோடி’ போன்ற படங்களின் இயக்குநர். அதன் பிறகு சில காலம் நடிப்பிலும் கவனம் செலுத்தியவர், அண்மைக்காலமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவாக தொலைக்காட்சி விவாதங்களில் ஆக்ரோஷமாக பேசி வந்தார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வந்த பிரவீன் காந்தி இந்த சீசனின் அதிக ‘கன்டென்ட்’ தரும் போட்டியாளராக இருப்பார் என்று எதிர்பார்க்கலாம்.
கெமி: ’குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் முந்தைய சீசனில் கோமாளிகளில் ஒருவராக வந்ததன் மூலம் இவரை பலரும் அறிந்திருக்கலாம். அதன் பிறகு சமூக வலைதளங்களிலும் பிரபலமான இவர், கூடைப் பந்து வீராங்கணையும் கூட. துபாயின் நடைபெற்ற ஒரு போட்டியில் இந்தியா சார்பில் வெள்ளிப் பதக்கம் வென்றதாக பெருமிதத்துடன் கூறுகிறார் கெமி.
ஆதிரை: திருப்பூரைச் சேர்ந்த இவர் விஜய் நடித்த ‘பிகில்’ படத்தில் கால்பந்து வீராங்கனைகளில் ஒருவராக நடித்திருந்தார். அதன் பிறகு கரோனா பரவலால் வாய்ப்பு எதுவுமின்றி இருந்தவர், பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘மகாநதி’ சீரியலில் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ரம்யா ஜோ: மைசூரைச் சேர்ந்த இவர் சிறுவயதில் பெற்றோரின் பிரிவால் ஆதரவற்றவராக வளர்ந்தவர். சினிமாவில் சின்னச் சின்ன வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர், பின்னர் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிகளில் நடனமாடி பிரபலமானார்.
கானா வினோத்: சென்னையைச் சேர்ந்த கானா பாடகர். சமூக வலைதளங்களில் இவரது பாடல்களுக்கு ஒரு ரசிகர் கூட்டமும் உள்ளது. தனது பாடல்களை உலக அளவில் கவனிக்க வைப்பதற்காக பிக்பாஸ் வீட்டுக்குள் வந்திருப்பதாக சொல்கிறார் வினோத்.
வியானா: திண்டிவனத்தைச் சேர்ந்த இவர், ஏர் ஹாஸ்டஸ் ஆக இருந்து சினிமா கனவுகளுடன் மாடலிங் துறையில் நுழைந்தவர். தற்போது தனது அடுத்தகட்ட பயணத்தை எதிர்நோக்கி பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.
பிரவீன்: பெங்களூருவில் இருந்து சினிமா வாய்ப்பு தேடி சென்னை வந்த இவர், நடிப்பு மட்டுமின்றி இசையிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறார். ஈரமான ரோஜா. ராஜா ராணி, பாரதி கண்ணம்மா உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
சுபிக்ஷா: தூத்துக்குடியைச் சேர்ந்த மற்றொரு சமூக வலைதள பிரபலம். மீனவ குடும்பத்தைச் சேர்ந்த இவர், மீன்பிடி, கடல் உணவுகள் தொடர்பான வீடியோக்களின் மூலம் பிரபலமானார்.
அப்சரா சி.ஜே: திருநங்கையான இவர் கன்னியாக்குமரியை சேர்ந்தவர். கணினி இளங்கலை முடித்த இவர் மாடலிங் துறையில் ஜொலித்து வருபவர். 2020ஆம் ஆண்டு மிஸ் இண்டர்நேஷனல் குயின் இண்டியா பட்டம் வென்றிருக்கிறார். தொடர்ந்து திருநங்கைகளின் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்து வருகிறார்.
நந்தினி: கோவையைச் சேர்ந்த இவர், தனது தாய் தந்தையரின் இறப்புக்குப் பிறகு யோகா பயிற்சியில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பல்வேறு சினிமா நிகழ்ச்சிகளில் மேடை தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தொடர்ந்து ஓடிக் கொண்டிருப்பதாக சொல்லும் நந்தினி பெரும் நம்பிக்கையுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.
விக்கல்ஸ் விக்ரம்: விக்கல்ஸ் என்ற யூடியூப் சேனலை தொடர்ந்து சமூக வலைதளங்களை பின் தொடர்பவர்கள் பலரும் அறிந்திருக்கலாம். பிரபலமான பாடல்களை இவர்களின் குழு ரீக்ரியேட் செய்து வெளியிடும் வீடியோக்கள் வைரலாகும். ஏ.ஆர்.ரஹ்மானே இவர்களது விடியோவை ரிகிரியேட் செய்து வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ பெரும் பிரபலமானது. ஸ்டாண்ட் அப் காமெடியனாகவும் பல மேடைகளில் சிரிக்க வைத்தவர் விக்ரம்.
கமருதீன்: சென்னையைச் சேர்ந்த இவர், ஐடி வேலையை விட்டுட்டு சினிமா உலகில் நுழைந்தவர். சில வெப் தொடர்களிலும் சீரியல்களில் நடித்திருக்கும் கமரூதீன் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தன் கனவு நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் இதில் கலந்து கொண்டிருப்பதாக சொல்கிறார்.
கலையரசன்: அகோரி கலையரசன் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்த இவர், 7 வயது முதலே அருள்வாக்கு சொல்லி வருவதாக கூறுகிறார். நாட்டுப்புற கலைகளில் ஈடுபாடு கொண்ட இவர் மற்றவர்களுக்கும் இலவசமாக கற்றுத் தந்திருக்கிறார். தனிப்பட்ட பிரச்சினைகளால் காசிக்கு சென்று அகோரியாக வாழ்ந்தவர், பின்னர் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்திருக்கிறார்.
இதுவரை நடந்த சீசன்களில் சினிமா, சீரியல்களில் பிரபலமாக இருந்தவர்கள், வளர்ந்து வரும் கலைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், இந்த சீசனில் ஓரிருவரை தவிர முழுக்க முழுக்க சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.