விஜய் – ஜோதிகா நடிப்பில், எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில், ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் கடந்த 2000இல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘குஷி’. இது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி ஃபிலிம் ஃபேக்டரியின் சார்பில் சக்திவேலன் வெளியிடுகிறார். இதை அறிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும்போது: “தமிழில் வெற்றியைத் தொடர்ந்து, தெலுங்கு, இந்தியிலும் எஸ்.ஜெ. சூர்யா தான் இயக்கினார். ஜோதிகா, பூமிகா இருவரது நடிப்பிலும் இயக்குநர் சூர்யா தான் தெரிவார். இப்படத்துக்கு தேவா சார் இசை என்றால் நம்ப முடியாது. விஜய் அப்போது டாப் ஹீரோ. ‘கதையில் சண்டைக் காட்சிகள் இல்லை, வையுங்கள்’ என்று விஜய் கூறினார்.
ஆனால், சூர்யா, ‘இது லவ் ஸ்டோரி, வைக்க முடியாது’ என்று கூறிவிட்டார். ஆனால், விஜய் விடுவதாக இல்லை. தற்போது ‘குஷி – 2’ படம் எடுத்தால் நன்றாக இருக்கும். அதையும் எஸ்.ஜே. சூர்யாவே இயக்க வேண்டும். அதில் விஜய் சார் நடித்தாலும் சரி, அல்லது அவருடைய மகன் நடித்தாலும் சரி, அல்லது வேறு யார் நடித்தாலும் முதல் பாகத்தைப் போலவே படம் மிகப்பெரிய வெற்றிபெறும்” என்றார்.