ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம், ‘மதராஸி’. இதில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் செப்.5-ம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அதில் சிவகார்த்திகேயன் பேசும்போது, “எனக்கு முருகதாஸ் படங்கள் மிகவும் பிடிக்கும். அவர் ஒரு பேட்டியில், ‘மதராஸி’ படத்தின் கதையை, ஷாருக்கானிடம் சொன்னதாகக் கூறியிருந்தார். அந்த ‘எஸ்ஆர்கே’ பண்ண வேண்டிய படத்தை இந்த ‘எஸ்கே’ பண்ணியதே பெரிய விஷயம்.
இந்தப்படத்தின் கதையின் முதல் பாதி சொன்னதுமே ரொம்ப மகிழ்ச்சியாகி விட்டது. இந்தக் கதையில் சொல்லப்பட்டிருக்கிற விஷயம் பிடித்திருந்தது. முருகதாஸ், படப்பிடிப்பிலும் ரொம்ப எளிமையாக நடந்துகொண்டார். ஒரு ஹீரோவுக்கு என்ன மரியாதை கொடுக்க வேண்டுமோ, அதை சரியாக கொடுத்தார். அதனால்தான் அவர் இப்போதும் டாப் இயக்குநராக இருக்கிறார்.
‘கோட்’ படத்தில் விஜய்யுடன், அவர் துப்பாக்கியை என்னிடம் கொடுப்பது போன்ற ஒரு காட்சியில் நடித்த பிறகு, என்னைக் குட்டித் தளபதி, திடீர் தளபதி ஆகப் பார்க்கிறார் என்று கூறினார்கள். அவர் அப்படி நினைத்திருந்தால் துப்பாக்கியை என்னிடம் கொடுத்திருக்க மாட்டார், நானும் வாங்கியிருக்க மாட்டேன். நான் அவருடைய ரசிகர்களைப் பிடிக்கப் பார்ப்பதாகவும் சொன்னார்கள். ரசிகர்களை அப்படி
யாராலும் பிடிக்க முடியாது. ரசிகர்கள் என்பது பவர். அண்ணன் அண்ணன்தான். தம்பி தம்பிதான். இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறினார். படக்குழுவினர் கலந்து கொண்டனர்.