உதயா, அஜ்மல், யோகி பாபு இணைந்து நடிக்கும் படம், ‘அக்யூஸ்ட்’. இதை பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்குகிறார். கன்னட நடிகை ஜான்விகா நாயகியாக நடிக்கிறார். நரேன் பாலகுமார் இசையமைக்கிறார். மருதநாயகம்.ஐ ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எல்.உதயா, தயா என்.பன்னீர்செல்வம், எம்.தங்கவேல் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி பேசுகையில், “நடிகர் உதயாவுக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது. அவரை எந்த அவமானமும் பாதிக்காது, விக்ரமுக்கு ‘சேது’ போல உதயாவுக்கு ‘அக்யூஸ்ட்’ அமையும். டிரெய்லர் மிரட்டுகிறது” என்றார்.
நடிகர் உதயா பேசும்போது, “ஒரு கட்டத்தில் திரையுலகத்தை விட்டே போய் விடலாம் என்று கூட யோசித்திருக்கிறேன். ஆனால் எனது தன்னம்பிக்கை காரணமாக இன்று உங்கள்முன்னால் நிற்கிறேன். எனவே அனைவரும் நம்பிக்கையுடன் உழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ‘அக்யூஸ்ட்’ எனது கேரியரில் மிக முக்கிய படம்.எனது 25-வது ஆண்டில் இப்படி ஒரு படம்கிடைத்திருப்பது எனது பாக்கியம். இந்த படத்துக்காக எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. தயாரிப்பாளர்களுக்கு மிக்க நன்றி. இயக்குநர் அற்புதமாக ‘அக்யூஸ்ட்’ படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என நம்புகிறேன்” என்றார்.
தயாரிப்பாளர் சங்கத் தலைவர் முரளி ராமசாமி, தயாரிப்பாளரும் இயக்குநருமான கேயார், நடிகர் ஆனந்த்பாபு, இயக்குநரும் நடிகருமான பாண்டியராஜன் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்