ஜேம்ஸ் கேமரூன் இயக்கி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘அவதார்’. உலக அளவில் அதிகம் வசூலித்த படமான இதன் அடுத்த பாகம் ‘அவதார்: தி வே ஆஃப் வாட்டர்’, 2022-ம் ஆண்டு உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகி வெற்றிபெற்றது.
இதன் 3-ம் பாகம் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ என்ற பெயரில் உருவாகியுள்ளது. சாம் வொர்த்திங்டன், ஸோயி சல்டானா, சிகோனி வீவர், ஸ்டீபன் லங் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.
“இந்த படத்தில் முன்பைவிட அதிகமான பண்டோராவை பார்ப்பீர்கள்; சாகசங்களைக் கொண்ட இந்தப் படம் கண்களுக்கு விருந்தாக அமையும். உணர்ச்சிகரமான காட்சிகளும் முன்பை விட அதிகமாக இருக்கும்” என்று ஜேம்ஸ் கேமரூன் ஏற்கெனவே கூறியிருந்தார்.
இந்நிலையில், இதன் முதல் டிரெய்லர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது. இரண்டு நிமிடம் 25 வினாடிகள் கொண்ட இந்த டிரெய்லர், பண்டோராவில் நடக்கும் முழுமையான ஒரு போர்க் காட்சியைத் தருகிறது. நிலம், கடல், வானம் என நடக்கும் போர்க் காட்சிகளின் கிளிம்ப்ஸ், படத்தின் மீதான ஆவலைத் தூண்டுகிறது. ஆபத்தில் இருந்து தங்கள் சமூகத்தைக் காப்பதில் உள்ள சிக்கல்களை ஆராய்வதாக இதன் கதை செல்கிறது. இந்தப் படம் டிச.19-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.