கடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் நடிகர் சிலம்ப ரசன் வழிபட்டு, தியானம் செய்தார். கடலூர் மாவட்டம், வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபை உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி தரிசனம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மேலும் மாத ஜோதி தரிசனமும் நடைபெறும். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கூடி ஜோதி தரிசனம் செய்வர்.
இங்குள்ள தருமசாலையில் உள்ள அணையா அடுப்பு இன்று வரை பலரின் பசியைப் போக்கி வருகிறது. தினமும் மூன்று வேளை சமைக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சிலம்பரசன் நேற்று காலை வடலூர் சத்திய ஞானசபைக்கு வருகை தந்தார்.
இங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தியானம் செய்தார். சத்திய தருமசாலை, அணையா அடுப்பு பகுதிகளுக்கு சென்று பார்த்தார். தொடர்ந்து வள்ளலார் சித்திபெற்ற மேட்டுக் குப்பத்தில் உள்ள திருவறை தரிசனம், வள்ளலார் தண்ணீரை விளக்கு எரியச் செய்த நற்கருங்குழி ஆகிய பகுதிகளுக்கு சென்று வழிபாடு செய்தார்.
நானும் சைவமே! – இதுகுறித்து சிலம்பரசன் கூறுகையில், “ஏழை எளிய ஆதரவற்றோரின் பசியைப் போக்கி மூன்று வேளையும் அன்னதானம் வழங்கும் வள்ளலாரை போல, நானும் அனைவருக்கும் அன்னதானம் வழங்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். நான் சைவம் தான். அதனால் தான் வள்ளலார் அழைத்த உடன் வடலூர் சத்திய ஞானசபைக்கு வருகை தந்து வள்ளலார் சுவாமி களை வழிபட்டிருக்கிறேன்” என்றார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு அக். 7-ம் தேதி காலை வெளியாகும் என படக்குழு நேற்று முன்தினம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று காலை படத்தின் பெயர் ‘அரசன்’ என்று வெளியான நேரத்தில் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபையில் நடிகர் சிம்பு தியானம் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு நடிகர் சிலம்பரசன் சென்று தரிசனம் செய்தது குறிப்பிடத்தக்கது.