லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’, ஆக. 14-ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இதையடுத்து, ஹீரோவாக நடிக்க இருக்கிறார், லோகேஷ் கனகராஜ். அதன் பிறகு கார்த்தி நடிப்பில் ‘கைதி 2’ படத்தை அவர் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
இதற்கிடையே அவர் ஆமிர்கான் நடிப்பில் சூப்பர் ஹீரோ கதையை இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன. இதை ஆமிர்கானும் லோகேஷ் கனகராஜும் உறுதி செய்திருந்தனர். இது நடிகர் சூர்யாவுக்குச் சொல்லப்பட்ட ‘இரும்புக்கை மாயாவி’ கதை எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படம் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன. முழு ஸ்கிரிப்டையும் முதலில் முடித்துவிட்டு, சில மாதங்களுக்குப் பிறகுதான் படப்பிடிப்புக்குச் செல்ல வேண்டும் என்று ஆமிர் கான் கூறியதாகவும் இது தொடர்பாக இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து எதிர்காலத்தில், சேர்ந்து பயணிக்கலாம் என்ற எண்ணத்துடன் இருவரும் சுமுகமாகப் பிரிந்துள்ளனர். இதனால் இந்த சூப்பர் ஹீரோ படம் இப்போது இல்லை என்கிறார்கள்.