தனது அடுத்த படங்களின் திட்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் தகவல் பகிர்ந்துள்ளார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்.
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். அவர் அடுத்து இயக்கவுள்ள படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணமிருந்தன. தற்போது ‘கூலி’ படத்தினை விளம்பரப்படுத்த அளித்த பேட்டியில், தனது அடுத்த படங்கள் குறித்து பேசியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
அதில், “நிறைய படங்கள் இருக்கின்றன. அடுத்து ‘கைதி 2’ இயக்கவுள்ளேன். கமல் சாருடன் ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ ஆகிய படங்கள் இருக்கின்றன. இப்படங்கள் அனைத்துமே முன்பே முடிவானவை.
‘மாஸ்டர் 2’, ‘லியோ 2’ ஆகியவை இயக்க ஆசை தான். ஆனால், விஜய் இல்லை. அவர் மீண்டும் திரையுலகிற்கு எப்போது வருவார் எனத் தெரியாது. இப்படங்கள் அனைத்துமே நடிகர்களின் தேதிகள், எனது தேதிகள் உள்ளிட்டவற்றை வைத்து நடக்கும். எப்போது என்று யாருக்கும் தெரியாது.
‘கைதி 2’ படத்துக்கு பின்பு ஆமிர்கான் படம் இயக்கவுள்ளேன். அதனை இந்திப் படம் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அது உலகளாவிய படம் என்று சொல்வேன். அதுவொரு அற்புதமான கதை. மூன்று, நான்கு மாதங்களாக அவருடன் பேசி வருகிறேன்.
ஆமிர்கானுக்கும், கமல்ஹாசனுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர் ஒரு படத்தை எப்படி அணுகிறார் என்பது ஆச்சரியமாக இருக்கிறது. அது சூப்பர் ஹீரோ படத்தைத் தாண்டி மிகப்பெரிய ஆக்ஷன் படமாக இருக்கும். அக்கதையை பல வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.