மலையாளத்தில் ‘லோகா’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்திருப்பதால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா சாப்டர் 1: சந்திரா’. ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடித்த ‘ஹ்ருதயபூர்வம்’ மற்றும் ஃபகத் பாசில் நடித்த ‘ஓடும் குதிர சாடும் குதிர’ ஆகிய படங்கள் வெளியாகின. இதில் மற்ற இரண்டு படங்களை விட ‘லோகா’ படத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
முதல் நாளில் 250 திரையரங்குகளில் வெளியான ‘லோகா’, அடுத்த நாளில் இருந்து 325 திரையரங்குகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் படக்குழுவினர் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். வரும் நாட்களில் இன்னும் திரையரங்குகள் மற்றும் காட்சிகள் அதிகமாகும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இந்த வரவேற்பினால் இதர மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகவுள்ளது.
‘லோகா’ படத்தின் தமிழக உரிமையினை ஏஜிஎஸ் நிறுவனம் பெற்று வெளியிட்டுள்ளது. இன்று முதல் தமிழகத்தில் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய சினிமாவில், முதல் பெண் சூப்பர் ஹீரோவை அறிமுகப்படுத்தும் படமாக இது உருவாகி இருக்கிறது. டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ள இதில், கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
‘பிரேமலு’ நஸ்லன், சந்து சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஜேக்ஸ் பீஜாய் இசை அமைத்துள்ளார்.