‘லோகா’ படத்தினை ஐந்து பாகமாக உருவாக்க திட்டமிட்டு இருப்பதாக துல்கர் சல்மான் தெரிவித்துள்ளார்.
டோமினிக் அருண் இயக்கத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்கென் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘லோகா: சாப்டர் 1 – சந்திரா’. துல்கர் சல்மான் தயாரித்து வெளியிட்டுள்ள இப்படத்துக்கு அனைத்து மொழிகளிலும் பெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. 100 கோடி வசூலைக் கடந்த முதல் தென்னிந்திய நாயகியை மையப்படுத்திய படம் என்ற சாதனையை எட்டியிருக்கிறது.
தமிழில் ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள இப்படத்துக்கு மாபெரும் ஆதரவு கிடைத்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்தித்தது படக்குழு. இச்சந்திப்பில் தயாரிப்பாளர் துல்கர் சல்மான் பேசும் போது, “நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை, ஒரு டீச்சராக பசங்களை கூட்டி வந்துள்ளேன். நாங்கள் இதை கேரளா அளவில் சின்னதாகத் தான் ஆரம்பித்தோம் இப்போது எல்லா இடத்திலும் பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது. இதில் உழைத்த எல்லோரும் அவர்கள் படம் போல உழைத்தார்கள் இந்த வெற்றி அவர்களுக்கானது தான்.
கல்யாணியைத் தவிர இந்தப் படத்திற்கு வேறு யாருமே செட் ஆக மாட்டார்கள் என்ற அளவிற்கு அவர் பொருத்தமாக இருந்தார். கதை சொன்ன மறுநாளே அவர் ட்ரெய்னிங் எடுக்க ஆரம்பித்துவிட்டார். நாங்கள் நினைத்ததை விட சிறப்பாக செய்துள்ளார். நேரடித் தமிழ்படம் போல இப்படத்தை டப்பிங் செய்து தந்த பாலா சாருக்கு நன்றி. இந்த அளவு வரவேற்பு நாங்களே எதிர்பார்க்கவில்லை.
இப்படத்தை ஐந்து பாகமாக எடுக்க திட்டமிட்டுள்ளோம். நான் எத்தனையோ படங்கள் நடித்துள்ளேன் இந்த அளவுக்கு வரவேற்பைப் பார்க்கவில்லை. அதற்கான மரியாதையாக உடனே அடுத்தடுத்த பாகங்களை உருவாக்குவோம். லோகா மாதிரி இன்னும் அடுத்தடுத்து படங்கள் தருவோம்.
என் பேனரில் நான் மட்டுமே நடிக்க வேண்டும் என எப்போதும் நினைத்ததில்லை, எனக்கு சினிமா அவ்வளவு பிடிக்கும், என் பேனரில் மற்றவர்கள் நடிக்கும் படங்களும் தயாரித்து வருகிறோம்” என்று பேசினார் துல்கர் சல்மான்.