நடிகர் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம், ‘லூசிஃபர்’. இதில் மோகன்லால், மஞ்சுவாரியர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அரசியல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இது, 2019-ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மலையாள சினிமா வரலாற்றில் ரூ.200 கோடி வசூலித்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இதையடுத்து இதன் இரண்டாம் பாகம் ‘எல் 2 : எம்புரான்’ என்ற பெயரில் உருவானது. பிருத்விராஜ் இயக்கிய இந்தப் படத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் பற்றிய காட்சிகள் இடம்பெற்றதால் சர்ச்சையை சந்தித்தது.
இதன் மூன்றாம் பாகமான ‘எல் 3: அஸ்ரேல்’ படம் பற்றிய தகவல்கள் வெளியாகி இருந்தன. அந்தப் படத்தின் முக்கிய காட்சிகளை நீருக்கடியில் எடுக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் அதை மறுத்துள்ள பிருத்விராஜ் தரப்பு, “லூசிஃபர் 3 படம் குறித்து சில ஊடகங்கள் தவறான தகவல்களை வெளியிட்டுள்ளன. இது வெறுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதி. போலியான ஐடி மூலம் தவறான வதந்தி வெளியாகி இருக்கிறது” என்று தெரிவித்துள்ளது.