‘லியோ’ விமர்சனத்தால் தனக்கு பாதிப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானதற்கு லோகேஷ் கனகராஜ் பதிலளித்துள்ளார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், சஞ்சய் தத், த்ரிஷா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘லியோ’. இப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதே வேளையில் இப்படத்தில் இடம்பெற்ற ஃப்ளாஷ்பேக் காட்சி பெரும் விமர்சனத்தை ஈட்டியது. இது தொடர்பாக பலரும் லோகேஷ் கனகராஜை கடுமையாக விமர்சித்திருந்தார்கள்.
தற்போது ‘லியோ’ ஃப்ளாஷ்பேக் விமர்சனம் குறித்து லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில், “லியோ படத்தின் ஃப்ளாஷ்பேக் காட்சிக்கான விமர்சனம் என்னை ரொம்பவே பாதித்ததாக பலரும் நினைக்கிறார்கள். உண்மையில், அது என்னை பாதிக்கவில்லை. அது எனக்கு கொடுக்கப்பட்ட விழிப்புணர்வாக எடுத்துக் கொண்டேன். அவ்வளவு தான்.
‘லியோ’ ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் ஒரு தொய்வு இருந்தது. அதற்கான முழு பொறுப்பையும் எடுத்துக் கொள்கிறேன். அது இன்னும் சிறப்பாக செய்திருக்க வேண்டும். ஆனால், அந்த 20 நிமிடக் காட்சிகள் படத்தின் வியாபாரத்தையோ அல்லது மீண்டும் படம் பார்க்க வருபவர்களையோ பாதிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.