லாரன்ஸ் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை ‘ரெபல்’ இயக்குநர் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘காஞ்சனா 4’ படத்தினை இயக்கி, நடித்து வருகிறார் லாரன்ஸ். இதில் பல்வேறு முன்னணி நாயகிகள் நடித்து வருகிறார்கள். பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை. இதன் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தினைத் தொடர்ந்து லாரன்ஸ் புதிய படமொன்றில் நடிக்கவுள்ளார். இதனை ‘ரெபல்’ இயக்குநர் நிகிலேஷ் இயக்குவார் எனத் தெரிகிறது. இதற்கான பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகிலேஷ் கூறிய கதை மிகவும் பிடித்துவிடவே, உடனடியாக தேதிகள் ஒதுக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார் லாரன்ஸ். விரைவில் இறுதிகட்டப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.
லாரன்ஸ் – நிகிலேஷ் படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் தெரியவரும். ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ரெபல்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் நிகிலேஷ். இப்படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.