சென்னை: ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்துள்ள உயர் நீதிமன்றம், படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு அளிக்க வேண்டிய ரூ.5.90 கோடிக்கான உத்தரவாதத்தை 4 வார காலத்தில் தாக்கல் செய்ய ரவிமோகனுக்கு உத்தரவிட்டுள்ளது.
தங்களது படத்தில் நடிக்க முன்பணமாக பெற்ற ரூ.6 கோடியை திருப்பித் தர நடிகர் ரவி மோகனுக்கு உத்தரவிடக் கோரி பாபி டச் கோல்டு யுனி வர்சல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இதேபோல கால்ஷீட் கொடுத்தும் படப்பிடிப்பு பணிகளை குறித்த காலத்துக்குள் தொடங்காத தால் தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு ரூ.9 கோடி இழப்பீடு கோரி அந்த படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடிகர் ரவி மோகனும் தனியாக வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த இரு வழக்குகளும் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கின் மூலமாக உங்களுக்கு எதிர்மறையான விளம்பரத்தைத்தானே தரும் என்றும், அதற்கு வாங்கிய முன்பணத்தை கொடுத்து விடலாமே என நடிகர் ரவி மோகன் தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு ரவி மோகன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.கார்த்திகைபாலன், “அந்த நிறுவனத்துக்காக மாதக் கணக்கில் காத்திருந்தும் அந்த நிறுவனம் படப்பிடிப்பு பணிகளைத் தொடங்கவில்லை. இதனால் எங்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்” என்றார்,
பதிலுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர், “தனது மனைவி உடனான விவாகரத்து பிரச்னையின்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாக அறிக்கை வெளியிட்ட நடிகர் ரவி மோகன் தற்போது நாங்கள் கொடுத்த தொகையை வைத்து சொந்த படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி புதிதாக படமும் தயாரித்து வருகிறார். எனவே, எங்களிடம் வாங்கிய தொகையை திருப்பித்தர உத்தரவிட வேண்டும்” எனக் கோரினர்.
அதையடுத்து நீதிபதி, இந்த பிரச்சினையில் இரு தரப்பிலும் சுமுகத் தீர்வு காண மத்தியஸ்தரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ரூ.9 கோடி இழப்பீடு கோரியும், அதுவரை வேறு படங்களை பாபி டச் கோல்டு நிறுவனம் வெளியிடக்கூடாது என தடை கோரி நடிகர் ரவி மோகன் தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, ரூ.5.90 கோடிக்கான உத்தரவாதத்தை 4 வார காலத்தில் நீதிமன்த்தில் தாக்கல் செய்ய ரவி மோகன் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.