ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா: சாப்டர் 1’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.370 கோடியைக் கடந்துள்ளது.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியாகி நாடு முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற ‘காந்தாரா’ படத்தின் முன்கதையாக இப்படம் வெளியாகியுள்ளது. இதில் ருக்மிணி வசந்த், குல்ஷன் தேவய்யா, ஜெயராம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வெளியான முதல் நாளில் இருந்தே ஏகோபித்த வரவேற்பை பெற்று வரும் இப்படம் நல்ல வசூலையும் செய்து வருகிறது.
இந்த நிலையில் வெளியான ஐந்து நாட்களில் இப்படம் உலகம் முழுவதும் ரூ.370 கோடி வசூலித்துள்ளது. இந்தியாவில் ரூ.307 கோடி வசூலித்த நிலையில், வெளிநாடுகளில் ரூ.63 கோடியை இப்படம் வசூலித்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இப்படத்தின் வசூல் ரூ.400 கோடியை கடந்து விடும் என்று சினிமா நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இப்படம் கன்னடத்தில் ரூ.76 கோடி, தமிழில் ரூ.24,75 கோடி, தெலுங்கில் ரூ.52.65 கோடி, மலையாளத்தில் ரூ.20.75 கோடி, இந்தியில் ரூ.82 கோடி வசூலித்துள்ளது. அசல் மொழியான கன்னடத்தை காட்டிலும் இப்படம் இந்தி பேசும் மாநிலங்களில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.