‘கரகாட்டக்காரன்’ திரைப்படம் மறுவெளியீட்டு தயாராகி வருவதாக ராமராஜன் தெரிவித்துள்ளார்.
பல்வேறு பழைய படங்கள் தற்போது மறுவெளியீட்டிலும் வெற்றியடைந்து வருகிறது. இதில் அடுத்ததாக ‘கரகாட்டக்காரன்’ இணையவுள்ளது. வரும் 15-ம் தேதி இப்படம் 36-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இப்படத்தினை மறுவெளியீடு செய்யும் பணிகள் தொடங்கப்பட்டு இருப்பதாக ராமராஜன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
1989-ம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘கரகாட்டக்காரன்’. இப்படத்தின் காமெடி காட்சிகள், பாடல்கள் என அனைத்துமே இப்போதுள்ள ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
சுமார் ரூ.35 லட்சத்தில் உருவாக்கப்பட்டு திரையரங்குகளில் 400 நாட்களுக்கும் மேல் திரையிடப்பட்டு சாதனை புரிந்தது. தயாரிப்பாளருக்கு பன்மடங்கு லாபத்தை ஈட்டிக் கொடுத்தது ‘கரகாட்டக்காரன்’. தற்போது இப்படத்தின் மறுவெளியீடு குறித்த தகவல் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.