தனுஷ் நடித்த ‘புதுப்பேட்டை’ திரைப்படம் ஜூலை 26-ம் தேதி ரி-ரிலீஸ் ஆகவுள்ளது.
ஜூலை 26-ம் தேதி தனுஷ் தனது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளார். இதனை முன்னிட்டு அவரது ஹிட் படங்கள் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்காக வெளியாகவுள்ளது. இதில் ‘புதுப்பேட்டை’ படத்தினை 4கே தொழில்நுட்பத்தில் தரம் உயர்த்தி மறுவெளியீடு செய்யவுள்ளது படக்குழு. இது பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
தனுஷ் ரசிகர்களைத் தாண்டி, பலராலும் கொண்டாடப்பட்ட படம் ‘புதுப்பேட்டை’. இப்படம் வெளியான போது பெரிதாக கொண்டாடப்படவில்லை என்றாலும், CULT CLASSIC என்ற இடத்தை அடைந்தது. இப்போதும் இதன் காட்சியமைப்புகள், இசை, தனுஷின் நடிப்பு உள்ளிட்டவை பேசப்பட்டு வருகிறது. இதனால் ஜூலை 26-ம் தேதி ‘புதுப்பேட்டை’ படத்துக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், சோனியா அகர்வால், சினேகா, அழகம் பெருமாள் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘புதுப்பேட்டை’. 2006-ம் ஆண்டு வெளியான இப்படத்தினை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளராக யுவன் பணிபுரிந்திருந்தார்கள்.