ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகும் புதிய படம் அறிவிக்கப்பட்டுள்ளது.
‘காந்தாரா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு பல்வேறு மொழி கதைகளில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ரிஷப் ஷெட்டி. தற்போது ‘காந்தாரா 2’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படம் அக்டோபர் 2-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் இறுதிகட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
இதனிடையே ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகும் புதிய படத்தினை அறிவித்துள்ளது சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இப்படத்தினை அஸ்வின் கங்காராஜு இயக்கவுள்ளார். 18-ம் நூற்றாண்டில் வங்காளத்தில் நடைபெறுவது போன்ற ஒரு கற்பனையான அதிரடி ஆக்ஷன் கதை இதுவாகும். ஒரு கிளர்ச்சியாளன் எப்படி உருவாகிறான் என்பதை பின்னணியாக கொண்டது என்று தகவல் வெளியாகியுள்ளது.
‘ஆகாசவாணி’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஸ்வின் கங்காராஜு. அவருடைய இயக்கத்தில் அடுத்ததாக உருவாகும் படம் இது. இப்படத்தினை தெலுங்கு மற்றும் கன்னடம் என இரண்டு மொழிகளிலும் படமாக்கவுள்ளார்கள். இதர மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.